ரஜினியை அன்றே கணித்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.. ஹீரோவை வில்லனாக்கி, வில்லனை ஹீரோவாக்கி ஹிட் கொடுத்த மேஜிக்!

By John A

Published:

தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவிலேயே ஒரு நடிகரை வைத்து 1000 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யப்படுவது என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகத்தான் இருக்க முடியும். ஏனெனில் ரஜினி என்ற ஒற்றை மனிதர் கொடுக்கும் ஹிட் படத்தில் கிட்டத்தட்ட பல ஆயிரம் பேரின் உழைப்பு அடங்கியிருக்கிறது.

இந்த அளவிற்கு ரஜினியின் புகழ் வளரக் காரணம் அதிர்ஷ்டமும், உழைப்பும், திறமையும் தான். ரஜினி ஒரு பேட்டியில் தனது வெற்றிக்கு அதிர்ஷ்டமும் ஒரு காரணம் என்று கூறியிருக்கிறார். பெங்களுரு போக்குவரத்துத் துறையில் ஆரம்பக் காலகட்டத்தில் நடத்துனராகப் பணியாற்றி பின் நண்பர்களின் உத்வேகத்தால் திரைப்படக் கல்லூரியில் பயின்று கே.பாலச்சந்தர் என்னும் இயக்குநர் சிகரத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.

இவரது இந்த சிம்மாசனத்தைப் பறிக்க அடுத்தடுத்து எத்தனையோ நடிகர்கள் வந்தாலும் இவரின் இடத்தை துளியளவு கூட நிரப்ப முடியவில்லை. அதற்கு கடந்த ஆண்டு வந்த ஜெயிலர் படத்தின் வெற்றியே சாட்சி. ரஜினியின் ஆரம்ப காலப் படங்கள் அவருக்கு நெகடிவ் ரோலாகவே அமைந்திருந்தது. அப்படங்களில் தன்னுடைய மேனரிசத்தால் கெத்து காட்டி பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக உயர்ந்தார்.

இயக்குநர் வசந்த் எடுத்த துணிச்சல் முடிவால் ஹீரோ ஆன எஸ்.பி.பி.. கேளடி கண்மணி உருவான வரலாறு..

தொடர்ந்து படங்களில் நடித்து வந்தவர் முள்ளும் மலரும் படத்தில் தன்னை ஒரு அற்புத நடிகராக நிலை நிறுத்தினார். பல ஹிட் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த ரஜினி ஏ.வி.எம் தயாரிப்பில் நடிக்காமேலேயே இருந்தார். ஒருமுறை இவரின் முள்ளும் மலரும் படத்தைப் பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் இவர் பிற்காலத்தில் சிறந்த நடிகராக வருவார் என்று முன்பே கணித்திருந்தார். அதன்பின் ரஜினியை வைத்து ஏ.வி.எம் நிறுவனம் படம் எடுக்கத் திட்டமிட்டது.

மகிழ்வோடு ஒப்புக் கொண்ட ரஜினி தமிழ் சினிமாவின் பல்கலைக்கழமாக விளங்கிய ஏ.வி.எம் பேனரின் கீழ் முரட்டுக்காளை படத்தில் நடித்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இப்படம் பெரும் வெற்றி பெற்றது. ரஜினியை பக்கா ஆக்சன் ஹீரோவாக மாற்றியது. இதில் என்ன ஒரு விஷேசம் என்றால் அதுவரை ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று வர்ணிக்கப்பட்ட ஜெய்சங்கரை முதன்முதலாக எஸ்.பி.முத்துராமன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். வில்லனாக இருந்த ரஜினி இப்படத்தின் மூலம் சூப்பர் ஹீரோவாக மாறினார்.

அதன்பிறகு ரஜினி ஏ.வி.எம் பேனரில் போக்கிரி ராஜா, பாயும் புலி, நல்லவனுக்கு நல்லவன், மிஸ்டர் பாரத், மனிதன், எஜமான், ராஜா சின்ன ரோஜா, சிவாஜி போன்ற படங்களில் நடித்தார். இவை அனைத்துமே 100 நாட்களைக் கடந்து ஓடியவை என்பது குறிப்பிடத்தக்கது.