பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை என தனுஷ்-வெற்றி மாறன் கூட்டணயின் வெற்றிக்குப்பிறகு மீண்டும் இணைந்து ஹிட் கொடுத்த படம் தான் அசுரன். 2019-ல் வெளியான இந்தத் திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றுக் கொடுத்தது. கமர்ஷியலுடன் சென்டிமெண்ட், சமுதாயப் பார்வை ஆகியவற்றை கலந்து சினிமாவாகக் கொடுப்பதில் இயக்குநர் வெற்றி மாறன் கைதேர்ந்தவர்.
அசுரன் படத்திம் இப்படி ஒரு திரைக்கதையை எழுதி அதை ஹிட் படமாக மாற்றியவர். தனுஷ், மஞ்சுவாரியார், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டைப் பெற்றது. ஜி.பி. பிரகாஷ் குமார் இசையில், யுகபாரதியின் வரிகளில் பாடல்களும் ஹிட் ஆனது. இந்நிலையில் இப்படத்தில் உள்ள சோகப் பாடலான எள்ளுவய பூக்கலையே என்ற பாடல் உருவான விதம் குறித்து யுகபாரதி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கதைப்படி தனுஷின் மகன் இறந்த போது அவரை நினைத்து தனுஷ், மஞ்சுவாரியார் உருகி அழும் காட்சிக்காக முதலில் ‘பொல்லாத பூமி..’ என்ற பாடல் எழுதப்பட்டது. பின்னர் இந்த வரிகளை வைத்து பாடல் பதிவு செய்யப்பட்டு ஷூட்டிங் எடுக்கப்பட்டது. படம் முழுக்க உருவான பின் பிரிவியூ பார்க்கும் போது இந்தப் பாடலுக்கும், அந்தக் காட்சிகளுக்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதது போல் வெற்றிமாறனுக்குத் தோன்ற, யுகபாரதியும் அதையே நினைத்திருக்கிறார். எனவே இந்தப் பாடலை படத்தில் இடம்பெறாமல் வேறொரு பாடலை எழுதுங்கள் என்று கூற அன்றிரவே எள்ளுவய பூக்கலையே பாடலை எழுதியிருக்கிறார். சைந்தவியின் குரலில் இந்தப் பாடல் காண்போரைக் கண்ணீர் வரவழைத்தது.
இயக்குநர் பாட்டில் திருப்தி அடையாத இளையராஜா.. வாலி வரிகளில் மாஸ் ஹிட் கொடுத்து அசத்திய எஜமான்
ஆனால் எள்ளுவய பூக்கலையே என்று இந்த வரிகள் எதற்காக எழுதப்பட்டது என்றால் நெல்வயல் உண்டு, புல் வயல் உண்டு எள் வயல் என்று ஏன் கூறுகிறோம். கடலையில் இருந்து பெறப்படுவது கடலை எண்ணெய், தேங்காயில் இருந்து பெறப்படுவது தேங்காய் எண்ணெய், எள்ளில் இருந்து பெறப்படுவது எள் எண்ணெய் என்று கூறாமல் ஏன் நல்லெண்ணெய் என்று கூறுகிறோம் என்றால் எள் என்பது துக்க வீடுகளில் பயன்படுத்தப்படுவது.
அதனால்தான் கம்பராமாயணத்தில் கம்பரும் ராமன் வரும் இடத்தில் எள் என்ற வார்த்தையை உபயோகிக்காமல், உளுந்து என்ற வார்த்தையை பயன்படுத்தியிருப்பார். எனவே துக்கத்தைக் குறிக்கும் விதமாக எள்ளுவய என்ற வார்த்தையானது பாடலுக்கு பயன்படுத்தப்பட்டதாக யுகபாரதி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.