வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் அவரது இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படத்தை நிச்சயம் நாம் எளிதில் கடந்து விட முடியாது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிம்பு நடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி படமாக அமைந்திருந்தது.
டைம் லூப் என்ற தமிழ் சினிமாவுக்கு புதுமையான ஒரு கதையம்சம் கொண்ட ஜானரில் இந்த திரைப்படத்தை உருவாக்கிய வெங்கட் பிரபு, அனைவருக்குமே புரியும் வகையில் மிக நேர்த்தியாக படத்தின் திரைக்கதையை தயார் செய்திருந்தார். ஒரு பக்கம் சிம்பு நடிப்பில் மிரட்ட, இன்னொரு பக்கம் வில்லனாக நடித்த எஸ் ஜே சூர்யா தனி ரகத்தில் தனது ஆக்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார்.
அப்படி ஒரு சூழலில் தான் மாநாடு திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் அரவிந்த் சாமி நடிக்க இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனிடையே சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் மாநாடு திரைப்படத்தை தான் தவறவிட்டது குறித்தும் அதன் பின்னர் நடந்த சம்பவம் குறித்தும் சில கருத்துக்களை அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.
“ஒரு சில படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் போது வேறு படங்களுக்காக நம்மை அணுகும் சமயத்தில் நேரம் இல்லை என்றால் அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று நினைப்போம். ஆனால் அதே வேளையில் நாம் ஒரு திரைப்படம் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு கதையைக் கேட்கும் போது இந்த படத்தில் எப்படியாவது நடித்தே தீர வேண்டும் என்று நினைப்போம்.
அப்படி இரண்டு ஸ்கிரிப்ட் வந்தது. அதில் ஒன்று தான் மாநாடு. அந்த கதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆனால் வேறு படத்திற்கு டேட் கொடுத்திருந்தால் ஒரு மாதம் ஷூட்டிங் விஷயத்தில் சில பிரச்சனை வந்து என்னால் நடிக்க முடியாமல் போனது. மாநாடு படக்குழுவினரும் அதுவரை காத்திருக்காமல் சூட்டிங் செல்ல நினைத்த முடிவையும் நான் மதித்தேன்.
அந்த படத்தில் நடிக்காமல் போனதால் இன்று வரை நான் மாநாடு படமே பார்க்கவில்லை. ஏனென்றால் முழுக்க முழுக்க கதையை உள்வாங்கி அந்த கேரக்டராகவே நான் மாறிவிட்டேன். இதனால் நான் இருக்கும் இடத்தில் இன்னொருவர் இருந்ததால் அதை பார்க்க தோன்றவில்லை. ஆனால் நிச்சயமாக அதனை ஒரு நாள் பார்ப்பேன்.
மாநாடு போல மற்ற படங்களை ஒதுக்கி வைத்தாவது நடித்தே தீர வேண்டும் என்று நான் நினைத்த திரைப்படம் தான் மெய்யழகன். அவ்வளேவு அழகான ஸ்கிரிப்ட் அது” என அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார். பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதியன்று வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.