இன்றைய சூழலில் நாம் அதிகம் பார்க்கும் பறவை என்றால் அது காகம் தான் மற்ற சிறிய பறவைகள் அரிதாகவே நம் கண்ணில் படும். அதிலும் கிளியை எடுத்துக் கொண்டால் இப்போது அவை கண்ணில் தெரிவது அதிசயம் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால் ஒருவர் வீட்டிற்கு சென்றால் ஆயிரத்திற்கும் அதிகமான கிளிகளை நாம் ஒரே இடத்தில் பார்க்க முடியும்.
எத்தனை கிளிகள் வந்தாலும் அத்தனை கிளிகளுக்கும் நான் சாப்பாடு கொடுப்பேன் என்று உறுதியாக இருப்பவர்தான் சுதர்சன். இணையத்தில் பேரட் சுதர்சன் என்று பிரபலமாக அழைக்கப்படும் இவர் தனியார் சேனல் ஒன்றுக்கு கிளிகளுக்கு உணவு கொடுக்கும் அனுபவம் பற்றி பகிர்ந்து இருந்தார்.
பத்து வருடத்திற்கு முன்பு தன் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த சிட்டுக்குருவிகளை காணாது மாடிக்கு சென்று பார்த்த சுதர்சன் அங்கு சில பறவைகள் இருப்பதை பார்த்து அவற்றிற்கு வீட்டில் இருந்த தானியங்களை வைத்துள்ளார். அதனை சாப்பிட அணில், மைனா, காகம் போன்றவை வந்ததால் தொடர்ந்து இதுபோன்று தானியங்களை வைக்க தொடங்கியுள்ளார்.
ஒருநாள் கிளிகள் இரை தேடி அவர் வீட்டிற்கு வந்தபோது அவற்றின் அழகை பார்த்து ரசித்த சுதர்ஷன் தொடர்ந்து கிளிகளை தன் வீட்டிற்கு வர வைக்க வேண்டும் என்று நினைத்து இணையத்தில் தேடி உள்ளார். அங்கு அவருக்கு கிளிகள் ஊறவைத்த அரிசியை விரும்பி சாப்பிடும் என்று தெரியவந்துள்ளது. அதன் பிறகு இன்று வரை காலை மாலை என இரண்டு வேளை கிளிகளுக்கு ஊறவைத்த அரிசியை உணவாக வைத்து வருகிறார்.
ஆரம்பத்தில் பத்து பதினைந்து என அவர் வீட்டிற்கு வந்த கிளிகளின் எண்ணிக்கை ஒரு கட்டத்தில் ஆயிரம் வரை சென்றுள்ளது. அதிலும் கோடை காலம் என்றால் அவரது வீட்டை தேடி 5 ஆயிரம் கிளிகள் வரை வருமாம். பறவைகளுக்கு அன்னச்சத்திரம் என்றால் அது சுதர்சன் அவர்களின் வீடு என்று கூறலாம்.
சுதர்சன் இவ்வாறு கிளிகளுக்கு உணவு வைக்க தொடங்கிய போது அவரது மனைவி அதற்கு சம்மதிக்காமல் இருந்துள்ளார். தேவையில்லாமல் பணம் செலவு செய்வது ஏன்? என அவர் நினைத்துள்ளார். ஆனால் காலப்போக்கில் கிளிகள் அதிக அளவில் வருவதை பார்த்த சுதர்சன் அவர்களின் மனைவிக்கும் இதில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
https://www.instagram.com/reel/Chh8rvqsCg2/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
இவர் கிளிகளுக்கு எந்த அளவிற்கு மகிழ்ச்சியுடன் உணவு வைக்கிறார் என்றால் தனது மகளின் திருமணம் காலையில் ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் என்று இருந்த போதிலும் கிளிகளுக்கு உணவு வைத்து விட்டு திருமணத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இவ்வாறு கிளிகளுக்கு உணவு வைப்பதால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையா என்று அவரிடம் கேட்டால் அவர் கூறுவது, “வெளியூர் பயணம் மேற்கொள்வது மட்டும் முடியாது என்றும் அது தவிர கிளிகளுக்கு உணவு வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறியுள்ளார்.
சுதர்சன் அவர்கள் பறவைகளுக்கு உணவு வைப்பது மட்டுமல்லாது அவை போடும் விதையெச்சங்கள் மூலம் முளைக்கும் மரங்களையும் பத்திரமாக எடுத்து மரங்கள் இல்லா பகுதிகளில் நடுவாராம். இதனால் பறவைகளுக்கு வீடு கிடைப்பதோடு நமக்கும் ஆக்ஸிஜன் கிடைக்கும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.