இந்திய சினிமா மட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் தனது இசையால் பலரையும் கட்டிப்போட்டு வருபவர் தான் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். கடந்த 1992 ஆம் ஆண்டு ரோஜா என்னும் திரைப்படத்தின் மூலம் இந்த புயல் வீசத் தொடங்கிய நிலையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக யாரும் நெருங்க கூட முடியாத அளவுக்கு பல சாம்ராஜ்யத்தையும் இசையின் மூலம் நடத்தி வருகிறது.
தேசிய விருது, ஃபிலிம்பேர் விருது தொடங்கி ஆஸ்கர் மற்றும் கிராமிய விருதுகளையும் சர்வதேச அளவில் வாங்கியதுடன் தனக்கான அங்கீகாரத்தையும் பல இடங்களில் தடம்பதித்துள்ளார் ஏ ஆர். ரஹ்மான். சமீபத்தில் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தில் ரஹ்மான் பாடல்கள் வெளியாகி இருந்த நிலையில் ஆரம்பத்தில் இதற்கான வரவேற்பு சுமாராகத்தான் இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல இந்த பாடல்களை மீண்டும் ரசிகர்கள் கேட்க தொடங்கியதுடன் தற்போது பலரின் பிளேலிஸ்ட்டையும் பாடல்கள் ஆக்கிரமித்து வருகிறது.
இதனிடையே, மறைந்த பிரபலமான மைக்கேல் ஜாக்சன் குறித்து ரஹ்மான் தெரிவித்த கருத்து தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. இதுகுறித்து ரஹ்மான் பேசுகையில், “2009 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நான் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தேன். அப்போது என்னுடன் இருந்தவரின் நண்பர் மைக்கேல் ஜாக்சன் மேனேஜர் என்று கூறினார். அப்போது அவரிடம் என்னால் மைக்கேல் ஜாக்சனை பார்க்க முடியுமா என்று ஜாலியாக கேட்டேன்.
அவரும் நிச்சயம் நான் மெயில் அனுப்புகிறேன் என்று கூறி மைக்கேல் ஜாக்சனுக்கு அனுப்பி இருந்தார். ஆனால் ஒரு வாரமாக எந்த பதிலும் வரவில்லை என நான் அந்த நினைப்பை விட்டு விட்டேன். இதன் பின்னர் அதே ஆண்டில் ஆஸ்கர் விருதுக்கு நான் பரிந்துரை செய்யப்பட்டபோது எனக்கு திரும்ப மெயில் வந்தது. அதாவது மைக்கேல் ஜாக்சன் என்னை பார்க்க விரும்புவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் எனக்கு அவரை பார்க்க விருப்பமில்லை என நான் தெரிவித்து விட்டேன். ஒருவேளை ஆஸ்கர் விருதை நான் வென்றால் அவரை சந்திக்கிறேன். இல்லையென்றால் சந்திக்க வேண்டாம் என்று நான் கூறினேன். ஆனால் நிச்சயம் ஒரு ஆஸ்கர் விருதையாவது வெல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் இருந்தது.
ஆஸ்கர் விருது வென்ற மறுநாளே லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் அவருடைய வீட்டில் அவரை சந்தித்தேன். நான் சென்றதும் அவர்தான் கதவை திறந்து என்னை உள்ளே அழைத்தார். அந்த நேரத்தில் நானும் உலகத்திலேயே டாப் இடத்தில் இருந்ததுடன் அவரை பார்க்கும் ஒரு சிறந்த தருணமாகவும் அது இருந்ததாகவும் உணர்ந்தேன்.
அவர் எனது பாடலைப் பற்றி பல விஷயங்களை கேட்டு தெரிந்துகொண்டார். என்னுடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்றும் கூறியிருந்த மைக்கேல் ஜாக்சனை எந்திரன் திரைப்படத்தில் பாட வைக்கலாம் என்றும் விரும்பினேன். இதற்கு அவரும் சம்மதம் சொல்ல, அதற்கிடையே துரதிஷ்டவசமாக அவர் மறைந்து போனார்” என ரஹ்மான் கூறியுள்ளார்.