இன்று எண்ணற்ற இசையமைப்பாளர்கள் உருவானாலும் இன்று இந்தியாவையே தனது இசையால் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இளையராஜாவின் இசை தென்னிந்தியாவைக் கலக்கிக் கொண்டிருக்க அவரின் மாணவரான இசைப்புயல் குருவின் ஆசியால் இன்று ஆஸ்கர் சென்று தமிழனின் பெருமையை இசையால் நிலைநாட்டியிருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இளையராஜாவிடம் உதவியாளராகச் சேரும் போது அவருக்கு வயது வெறும் 12 தானாம். ஏ.ஆர்.ரஹ்மானின் அப்பா சேகர் மலையாளத்தில் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். எனவே, சிறு வயது முதலே இசையை முறையாக கற்றுக் கொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான். 80களில் இவர் வேலை செய்யாத பெரிய இசையமைப்பாளர்களே இல்லை என சொல்லுமளவுக்கு பலரிடம் கீபோர்டு வாசித்திருக்கிறார்.
மூடுபனி படத்திற்கு இளையராஜா இசையமைத்து கொண்டிருந்த நேரம். ஒருநாள் பாடல் ஒலிப்பதிவின்போது கீ போர்டு வாசிப்பவர் மது அருந்திவிட்டு வந்துவிட்டார். தனது குழுவில் யாரேனும் குடித்துவிட்டு வந்தால் இளையராஜாவுக்கு கடுமையான கோபம் வரும். எனவே, அவரை வெளியே அனுப்பிவிட்டார்.
தேவா போட்ட டைட்டில் தீம் மியூசிக்கை விரும்பாத ரஜினி.. ஆனால் இன்று வரை தொடரும் ரகசியம் இதான்..
அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் பெயரை ஒருவர் சொல்லி நமது சேகரின் மகன் என சொல்ல ‘வரச்சொல்’ என ராஜா சொல்ல ரஹ்மான் அங்கு சென்றார். அப்போது அவரின் பெயர் திலீப். அப்படத்தில் முதன் முறையாக இளையராஜாவுக்காக கீபோர்டு வாசிக்க ஆரம்பித்திருக்கிறார் ரஹ்மான். அதன்பின் பல விளம்பரப் படங்கள் உள்ளிட்டவைகளுக்கு இசையமைத்த ரஹ்மான் புன்னகை மன்னன் படத்தில் முதன் முதலாக இளையராஜாவுக்காக டிஜிட்டலில் கீபோர்டு இசைக்க அந்த தீம் மீயூசிக் மிகப் பிரபலமானது.
இன்றுவரை பலரது ரிங்டோனாக புன்னகை மன்னன் தீம் இருந்து வருகிறது. இவரின் திறமையை அறிந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் தனது விளம்பரப் படங்களுக்கு இசையமைக்க வைத்துள்ளார். பின் ஒருமுறை மணிரத்னத்திடம் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தி வைக்க தனது ரோஜா படத்திற்காக முதன் முதலில் இசையமைக்கும் வாய்ப்பினை வழங்கினார்.
படம் வெளியாகி ஏ.ஆர்.ரஹ்மானை இசையுலகில் தூக்கி நிறுத்தியது. முதல்படமே தேசிய விருதினை அள்ளித்தர அன்று முதல் இன்று வரை இசையுலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வருகிறார் இந்த இசைப்புயல்.