சில பாடல்களில் வரும் வரிகள் மற்றும் இசை ஆகியவற்றை தாண்டி நாம் கோரஸ் இசைக் கலைஞர்களின் குரல்கள் பயன்படுத்திய விதத்தை அதிகம் ரசித்திருப்போம். சில பாடல்களின் ஆரம்பமே கோரஸ் இசைக் கலைஞர்கள் குரலில் ஆரம்பிக்கப்படும் பொழுது அது பாடலையே வேறொரு தரத்திற்கு எடுத்துச் செல்லும். அப்படி ஒரு சூழலில், ஏ. ஆர். ரஹ்மான் இசையில் உருவான பாடல் ஒன்றில் கோரஸ் குரலுக்கு பின்னால் இருந்த காரணம், பலரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
விக்ரமன் இயக்கத்தில் உருவான புதிய மன்னர்கள் என்ற திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் விக்ரம், மோகினி, டெல்லி கணேஷ், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். புதிய மன்னர்கள் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ரஹ்மான் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தது.
இந்த காலம் வரையிலும் பல பாடல்கள் ப்ரெஷ்ஷாக தோன்றும் அளவுக்கு ரஹ்மான் இசையமைக்க, அதில் உருவான ஒரு பாடலின் பின்னணி பற்றி தற்போது பார்க்கலாம். இந்த படத்திற்காக விக்ரமன் மற்றும் ரஹ்மான் இணைந்த போது அவர்களுக்கு இடையே சிறிய கருத்து வேறுபாடு உருவானதாக கூறப்படுகிறது.
பொதுவாக தனது பாடலில் அதிகம் கோரஸ் பயன்படுத்தாத ஏ.ஆர். ரஹ்மான், புதிய மன்னர்கள் படத்தில் வானில் ஏணி போட்டு என்ற ஒரு பாடல் உருவாக்கிய போதும் கூட அதில் அதிகமாக கோரஸ் குரல் பயன்படுத்தவில்லை என தெரிகிறது. இதனை கேட்டதும் அதிருப்தி அடைந்த விக்ரமன், நீங்கள் இதற்கு முன்பு கோரஸ் அதிகமாக பயன்படுத்தாமல் சிறந்த பாடல்களை உருவாக்கி உள்ளீர்கள் என்றும், ஆனால் எனது படத்தில் கோரஸ் நிச்சயம் வேண்டுமென்றும் கூறி உள்ளார்.
அந்த சமயத்தில், தனக்கு தெரிந்தவர் மூலம் கோரஸ் இசைக்கலைஞர்கள் 10 பேர் வர வேண்டுமென கூறியுள்ளார். ஆனால், அந்த நேரத்தில் ஆள் கிடைக்காமல் போக என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த ரஹ்மானுக்கு ஒரு அசத்தலான ஐடியா தோன்றி உள்ளது. அங்கே இருந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள், வீடு வேலை செய்பவர்கள் என இசைக்கு சம்மந்தம் இல்லாத 10 பேரை தயார் செய்து, அவருக்கு சிறந்த ஒத்திகை கொடுத்து கோரஸ் இசையை தயார் செய்துள்ளார்.
வானில் ஏணி போட்டு பாடலில் வரும் கோரஸை இப்போது கேட்டாலும் இசையில் தேர்ந்தவர்கள் பாடியது போல இருக்கும். ஆனால் சில தந்திரங்களுடன் இசையே தெரியாதவர்களை ஏ. ஆர். ரஹ்மான் பயன்படுத்திய விதம், இயக்குனர் விக்ரமனையே ஒரு நிமிடம் அசர வைத்திருந்தது. இந்த செய்தியை கேள்விப்படும் பலரும் கூட உண்மையில் ஏ. ஆர். ரஹ்மான் ஒரு இசைப்புயல் தான் என வியந்து போய் பாராட்டியும் வருகின்றனர்.