தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து கொண்டே இருந்தாலும் திடீரென தங்களது ஃபார்மில் கோட்டை விட்டு பீல்டு அவுட் ஆகும் பலரும் இங்கே உள்ளார்கள். அந்த வகையில், ஜென்டில் மேன், முதல்வன், இந்தியன், சிவாஜி என பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள ஷங்கர் கடைசியாக இயக்கிய சில படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்திருந்தது.
அதே போல மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட இயக்குனர்களின் படங்களும் தோல்வியை தழுவ, ரசிகர்களின் விமர்சனத்தையும் சம்பாதித்து கொடுத்திருந்தது. இதற்கிடையே தான் ரமணா, கஜினி, துப்பாக்கி என தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களை உருவாக்கி கவனம் ஈர்த்த இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸுக்கும் அதே நிலைமை தான் நேர்ந்தது.
முருகதாஸின் கம்பேக்..
ஸ்பைடர், தர்பார், சிக்கந்தர் என பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய படங்கள் மண்ணைக் கவ்வ, இந்த காலத்திற்கு ஏற்ப அவரால் இனி படம் செய்ய முடியாது என்றும் இனிமேல் வெற்றி படங்களை அவரால் கொடுக்க முடியாது என்றும் கருத்துக்கள் பரவின. அப்படி இருக்கையில் தான், சிவகார்த்திகேயனை வைத்து முருகாதாஸ் இயக்கிய ‘மதராஸி’ திரைப்படம், பெரிய வெற்றியாக அமைந்திருந்தது.
100 கோடி ரூபாய் வசூல் செய்த மதராஸி திரைப்படம், ஏ. ஆர். முருகதாஸின் கம்பேக் படமாகவும் அமைந்திருந்தது. அவரால் இனியும் தரமான படைப்புகளை கொடுக்க முடியும் என்றும் ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்த வண்ணம் இருக்கும் சூழலில் கமல்ஹாசனை இயக்குவதற்காக தனக்கு வந்த வாய்ப்பு பற்றி சில கருத்துக்களையும் முருகதாஸ் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ஹிந்தியில் வெளியான முன்னா பாய் MBBS படத்தின் தமிழ் ரீமேக்கை சரண் இயக்க கமல்ஹாசன் நடித்திருந்தார். கிரேசி மோகன் – கமல் காம்போவில் படத்தில் வரும் வசனம், காமெடி, எமோஷன் என அனைத்துமே பட்டித் தொட்டியெங்கும் ஹிட்டடித்திருந்தது. ரீமேக் படம் என்றாலும் நிறைய காட்சிகள் ரசிகர்கள் மனதில் நின்றதால் படமும் பெரிய வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், வசூல் ராஜா MBBS படத்தை தான் இயக்கவிருந்ததாக ஏ.ஆர். முருகதாஸ் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
கிரேசி மோகன் வேணாம்..
“வசூல் ராஜா படத்தை நான் முதலில் இயக்குவது தொடர்பாக ஒரு 10 நாட்கள் அதுபற்றிய உரையாடல் நடந்தது. முன்னா பாய் MBBS எனக்கு ரொம்ப பிடித்த படம். தமிழில் அதை செய்தால் எதை செய்யக்கூடாது என மனதில் நினைத்திருந்தேன். முதலாவதாக கமல் சார் மெட்ராஸ் பாஷை பேசக்கூடாது என நினைத்தேன். ரவுடி பேக்ரவுண்டு என்பதால் அந்த பாஷை கேட்கும். ஆனால் கமல் சார் அதை ஏற்கனவே செய்து விட்டார். அதனால், அது வேண்டாம் என நினைத்தேன்.
இரண்டாவதாக கிரேசி மோகன் சார் வசனம் எழுதக்கூடாது என முடிவெடுத்திருந்தேன். ஏனென்றால் அவரது ஏரியாவில் அவர் இல்லாமல் போகும் போது அதில் இருக்கும் மற்ற விஷயங்கள் வெளியே வரும். ஆனால், நான் வேண்டாம் என நினைத்த இரண்டு விஷயமும் படத்தில் இருந்தது. வேறு சில காரணங்களால் அந்த சமயத்தில் வசூல் ராஜா MBBS படத்தை என்னால் இயக்க முடியாமல் போனது” என முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

