ஏ. ஆர். ரஹ்மான் ஆஸ்கர் வென்று திரும்பிய நாளில்.. வெறித்தனமான ரசிகனாக அனிருத் செஞ்ச விஷயம்..

Anirudh and AR Rahman : பொங்கல் விருந்தாக முதலில் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென சில காரணங்களால் விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகாது என்றும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு…

Anirudh about AR Rahman

Anirudh and AR Rahman : பொங்கல் விருந்தாக முதலில் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென சில காரணங்களால் விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகாது என்றும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாக இதன் பின்னர் நிறைய திரைப்படங்கள் பொங்கல் சமயத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதில் ஒரு திரைப்படம் தான் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள காதலிக்க நேரமில்லை. ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார். துணை முதல்வர் உதயநிதியின் மனைவியான இவர், வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த காலத்து காதலை மையப்படுத்தி காதலிக்க நேரமில்லை படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள நிலையில், இதன் ட்ரைலரும் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதே போல, ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான காதலிக்க நேரமில்லை பாடல்களும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

அனிருத் போட்ட பிளான்

பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 14 ஆம் தேதி, காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அப்போது ஜெயம் ரவி, நித்யா மேனன், ஏ. ஆர். ரஹ்மான் என படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள, இசையமைப்பாளர் அனிருத்தும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அனிருத் வெறித்தனமான ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். இதனிடையே, காதலிக்க நேரமில்லை இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்த அனிருத், “ஏ ஆர் ரஹ்மான் சாரின் எவ்வளவு பெரிய தீவிரமான ரசிகன் நான் என்பதை உணர்த்துவதற்காக உங்களிடம் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். ரஹ்மான் சார் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிக் கொண்டு வந்த சமயத்தில் ஏர்போர்ட்டில் அவரை பார்ப்பதற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன்.

தலைவன் தலைவன் தான்

எதற்காக என்றால் அவர் இரண்டு ஆஸ்கர் விருதுகளை காண்பிக்கும் போது கத்திக் கூப்பாடு போடுவதற்காக தான். ஆனால் அங்கே கூட்டம் அதிகமாக இருந்ததால் என்னால் ரஹ்மானை பார்க்க முடியவில்லை. இதனால் கோடம்பாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு வெளியே விடிய விடிய காத்திருந்தோம். அப்போது அவர் வெளியே வந்து 2 ஆஸ்கரை காண்பித்ததும் ஓஹோ என்று கத்தி கூப்பாடு போட்டவர்களில் ஒருவர் தான் இந்த அனிருத்.
Anirudh and AR Rahman

இப்போது வரைக்கும் அதே ஃபேன் பாய் மொமெண்ட் தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பலரும் அடுத்த சிறந்த இசையமைப்பாளர் இவர் தான், இவர் Era என பல விஷயங்களை பேசி கொண்டு இருக்கின்றனர். ஆனால் நான் எப்போதும் சொல்வது போல ‘தலைவன் தலைவன் தான் தொண்டன் தொண்டன் தான்’ என அனிருத் குறிப்பிட்டதும் அரங்கத்தில் இருந்த அனைவருமே ஆர்ப்பரிக்க தொடங்கிவிட்டனர்.