தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் முன்னணி நடிகராக இருந்தாலும், தனது திரைப்படங்களில் காண்பிக்கும் ஆர்வத்தை விட பைக் ரேசிங், வெளியூர் பயணம் உள்ளிட்டவற்றில் தான் அதிகம் ஈடுபாடுடன் இருந்து வருகிறார். டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் குமார், கடந்த சில ஆண்டுகளாக மிக அரிதாகவே திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் அஜித் மற்றும் ஹெச். வினோத் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் பலவித காரணங்களால் தாமதமாகி வந்தது. அந்த சமயத்தில், கிரிக்கெட் நடக்கும் மைதானங்கள் தொடங்கி சர்வதேச அரங்கு வரை வலிமை அப்டேட் வேண்டும் என ரசிகர்கள் பேனர் அடித்து டிரெண்ட் செய்ய தொடங்கி விட்டனர். இது தொடர்பாக படக்குழுவினரும் அறிக்கை விட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அஜித்தை பற்றிய சில வார்த்தைகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி என்ற திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகவும் அப்டேட்டுகள் பல நாட்களாக வெளிவராமல் இருந்தது. அஜித் திரைப்படம் வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்டதால் மீண்டும் ஒருமுறை அஜித்தை பற்றிய வார்த்தைகளை ட்ரெண்ட் செய்த ரசிகர்கள், ‘கடவுளே அஜித்தே’ என்ற பெயரை பெரிய அளவில் கொண்டாடியிருந்தனர்.
இதுவும் சர்வதேச அரங்கில் கவனம் பெற்று வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் கூட ‘கடவுளே அஜித்தே’ என்று சொல்லிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கி இருந்தது. இதனிடையே, நடிகர் அஜித் குமார், ‘கடவுளே அஜித்தே’ என ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருவது தனக்கு பிடிக்கவில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில் பொதுவெளியில், அநாகரிகமாக தேவையில்லாமல் எழுப்பப்படும் “க.. அஜித்தே” என்ற அந்த கோஷம் என்னை கவலை அடைய செய்துள்ளது. எனது பெயரை தவிர்த்து என் பெயருக்கு முன்னால் ஏதாவது சேர்த்து அழைக்கப்படுவதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். இதனால் பொது இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்த உங்களது ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.
என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார். விடாமுயற்சி டீசரில் கூட கடவுளே அஜித்தே என்ற இசையில் அனிருத் பின்னணி இசை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.