தமிழ் சினிமா வரலாற்றில் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர்களால் இன்றுவரை கொண்டாடப்படும் பிளாக்பஸ்டர் திரைப்படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘மங்காத்தா’. மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம், ஆரம்பத்தில் அஜித்தை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை அல்ல என்ற சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் இறுதிக்கட்டத்தில் ஒரே நாள் இரவில் நிகழ்ந்த எதிர்பாராத மாற்றங்களே, இந்த கதையை அஜித்தின் கைகளுக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
வெங்கட் பிரபு முதலில் இந்த கதைக்கு ‘பூச்சாண்டி’ என்ற தலைப்பைத்தான் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார். முழுக்க முழுக்க பணம் மற்றும் சூதாட்டத்தை மையமாக கொண்ட இந்த கதை, நாயகனுக்கு நெகட்டிவ் ஹீரோ போன்ற ஒரு கதாபாத்திரத்தை வலியுறுத்தியது. ஒரு வழக்கமான கதாநாயகனுக்குரிய அம்சங்கள் இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்டிருந்ததே இதன் சிறப்பம்சமாக இருந்தது.
‘பூச்சாண்டி’ கதை தயாரானபோது, விநாயக் மகாதேவன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இயக்குநர் வெங்கட் பிரபு முதலில் அணுகிய நடிகர்கள் அஜித்தே அல்ல. இளம் முன்னணி நடிகர்களான ஜெயம் ரவி, விஷால், மற்றும் ஆர்யா ஆகிய மூவரில் ஒருவரை வைத்து இப்படத்தை இயக்க அவர் முதலில் திட்டமிட்டிருந்தார். இந்த நடிகர்களிடம் கதையும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
ஜெயம் ரவி, விஷால் அல்லது ஆர்யா என மூன்று பேரில் ஒருவர் நடிக்க வேண்டியிருந்த இந்த கதை, எதிர்பாராத விதமாக ஒரே இரவில் மொத்தமாக திசை மாறியது. தற்செயலாக அஜித்திடம் வெங்கட்பிரபு இந்த கதையை அஜித்திடம் கூறினார். கெட்டவன்களையே ஏமாற்றும் இன்னொரு கேடுகெட்ட கெட்டவன் கேரக்டர் என்பதை தெரிந்து கொண்ட அஜித், இப்படி ஒரு கேரக்டரை தான் நான் ரொம்ப நாளாக எதிர்பார்த்தேன் என்று கூற உடனே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அஜித் விருப்பம் தெரிவித்ததால், படத்தின் தலையெழுத்தை மாற்றி அமைத்தது.
அஜித்தின் ஸ்டார் அந்தஸ்து, வெங்கட் பிரபுவின் புத்திசாலித்தனமான இயக்கம், மற்றும் படத்தின் கதைக்களம் ஆகியவை இணைந்ததால், ‘பூச்சாண்டி’ என்ற தலைப்பு நீக்கப்பட்டு, ‘சூதாட்டம்’ என்ற பொருள் கொண்ட ‘மங்காத்தா’ என்ற புதிய தலைப்புடன் இந்தப் படம் வெளியானது. இந்த கூட்டணி அமைந்த பிறகு, ‘மங்காத்தா’ திரைப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்து, மிகப்பெரிய வெற்றியை பெற்று, ரசிகர்களின் ஃபேவரைட் படமாக மாறியது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
