யுவனுக்கு அஜீத் செய்த பேருதவி.. திருப்பத்தைக் கொடுத்த தீனா..

By John A

Published:

இசைஞானி இளையாராஜா, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய இருவரும் உச்சாணியில் இருந்த நேரம் அது. அப்போது முதன் முதலாக 16 வயதில் யுவன் சங்கர்ராஜாவுக்கு இசையமைக்க வாய்ப்புக் கிடைக்கிறது. தந்தையிடம் முறையாக இசைஞானம் பயின்று இசையை இளம் வயதிலேயே கரைத்துக் குடித்த யுவனுக்கு முதல் படமாக அமைகிறது சரத்குமார் நடித்த அரவிந்தன் திரைப்படம்.

முதல் படத்திலேயே கனமான கீழ்வெண்மணி படுகொலை கதைக் களம். 16 வயது சிறுவனாக இருந்த யுவன் எப்படி கையாளப் போகிறார் என சந்தேகிருந்த வேளையில் அனைவரும் வியக்கும் விதமாக முதல் படத்திலேயே கவனிக்க வைத்தார் யுவன் சங்கர்ராஜா.

இன்று யுவன் வளர்ந்திருக்கும் இந்த இடத்திற்கு அஜீத்தும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.எல்.விஜய் என பல்வேறு புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து அவர்களை இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வளரச் செய்த பெருமை அஜீத்துக்கு உண்டு. அந்த வகையில் யுவன் சங்கர்ராஜாவின் திரை வாழ்விலும் அஜீத முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

பிக் பாஸ் 8: இது எல்லாம் ரொம்ப ஓவர்.. வீடே கலாய்த்த தர்ஷாவிடம் மனசாட்சியே இல்லாம சுனிதா கேட்ட கேள்வி..

அரவிந்தன் படத்தினைத் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தின் பாடல்களும் பெரிய ஹிட். ஆனாலும் யுவனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த போதும் பாடல்கள் பேசும்படியாக இல்லை. மேலும் வாய்ப்புகள் இல்லாமலும் இருந்திருக்கிறார். இந்நிலையில் யுவனின் திறமையை அறிந்த அஜீத் அந்த நேரத்தில் தீனா படத்தில் ஒப்பந்தமாகயிருந்தார். அப்போது அஜீத் யுவனின் வீட்டிற்குச் சென்று தீனா படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பினை பெற்றுத் தந்திருக்கிறார்.

தீனா படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. பாடல்களும் சூப்பர்ஹிட் ஆக யுவன் சங்கர் ராஜாவுக்கு முதல் வெற்றிப் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து யுவனின் தனது ஆட்டத்தினை ஆரம்பித்து இன்றுவரை வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். யுவனிஸம் என்று பேசும் அளவிற்கு காதல் பாடல்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். இன்று இவர் பிளே லிஸ்ட் இல்லாத இசை ரசிகர்களே கிடையாது. ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் என ஒருபுறம் ஜாம்பவான்கள் மிரட்ட அதிரடி இசை இல்லாமல் உருக வைக்கும் இசைக்குச் சொந்தக் காராக மாறினார் யுவன்.

மேலும் அஜீத்துக்கு தொடர்ந்து பூவெல்லாம் உன் வாசம், மங்காத்தா, பில்லா, பில்லா 2, ஏகன், ஆரம்பம், நேர்கொண்ட பார்வை, வலிமை என பல படங்களில் பணியாற்றி ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார் யுவன்.