பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர் சூப்பர் சுப்புராயனிடம் வேலை பார்த்து வந்த லாரன்ஸின் திறமையைக் கவனித்த சூப்பர் ஸ்டார் ரஜினி நடனக் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக்கக் கோரி சிபாரிசு கடிதம் கொடுக்க அன்றிலிருந்து லாரன்ஸின் சினிமா வாழ்க்கை ஆரம்பமாகியிருக்கிறது. பிரபுதேவாவிடம் உதவியாளராக பல படங்களில் பணியாற்றியவர் சிரஞ்சீவியின் ஹிட்லர் படத்தில் முதன்முதலாக நடன இயக்குநராக வாய்ப்பளித்தார். இவரது நடன அசைவுகள் ரசிகர்களுக்குப் பிடித்துப் போகவே தொடர்ந்து பல படங்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றினார்.
இயக்குநர் சரண் இயக்கிய அமர்க்களம் படத்தில் முதன் முதலில் பாடல் காட்சியில் தோன்றி நடித்தார். இப்படத்தில் வரும் காலம் கலிகாலம் ஆகிப் போச்சுடா பாடல் நடனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் பாடலில் ராகவா லாரன்ஸின் திறமையைப் பார்த்த அஜீத், பாடல் முழுக்க லாரன்ஸ்-க்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் எடுக்குமாறு சொல்லிவிட்டாராம். இதனால் சரண் அஜீத்தின் சில காட்சிகளை மட்டும் பாடலில் வைத்து விட்டு முழுப் பாடலையும் ராகவா லாரான்ஸ்-க்காக படமாக்கினாராம். அமர்க்களம் படம் வெளிவந்து இந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆனது.
மேலும் ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி அன்றும் இந்தப் பாடல் ஒலிக்காத விநாயகர் சிலைகளே கிடையாது. அந்த அளவிற்கு இந்தப் பாடல் பிரபலமானது. பரத்வாஜ் இசையில், ஸ்ரீனிவாஸ் குரலில், வைரமுத்து இப்பாடலை இயற்றியிருப்பார். அஜீத் கொடுத்த அந்தவாய்ப்பு ராகவா லாரன்ஸ்-க்கு நடிகராக திரையில் திருப்புமுனையைக் கொடுக்க அடுத்த படமே கே.பாலச்சந்தரின் 100 வது படமான பார்த்தாலே பரவசம் படத்தில் நடிக்க வித்திட்டது.
இதனையடுத்து திருமலை படத்தில் விஜய்யுடன் போட்டி நடனப் பாடலும் ஹிட் ஆக ராகவா லாரன்ஸ் தமிழ்சினிமாவில் நடிகராக முக்கியத்துவம் பெற்றார். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த சில படங்கள் ஓடவில்லை. எனினும் சோலோ பாடலாக வருஷமெல்லாம் வசந்தம், உன்னைக் கொடு என்னைத் தருவேன், பார்த்தேன் ரசித்தேன் போன்ற படங்களில் வரும் பாடல்களில் நடித்து ஹிட்டானார். இதனையடுத்து முனி என்ற படத்தின் கதையைத் தயார் செய்து தானே நடித்து இயக்குநராகும் முயற்சியில் இருக்க இவருக்கு முதன் முதலில் தனது படத்தில் நடிக்க வைத்த இயக்குநர் சரணே அந்தப் படத்தினைத் தயாரித்திருக்கிறார். முனி படம் சூப்பர் ஹிட்டாகி அடுத்தடுத்து காஞ்சனா-4 வரை வந்துள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ்சும் இன்று திரையுலகில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மூலம் உச்ச நடிகராக வளர்ந்துள்ளார். இதற்கு அமர்க்களம் படத்தில் அஜீத் போட்ட விதையே காரணமாகும்.