நடிகரும் சண்டை பயிற்சியாளருமான மகாநதி சங்கர், நடிகர் அஜித் குமார் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றிய தனது நீண்ட திரை பயணத்தையும், தனிப்பட்ட வாழ்வின் ஆன்மீக மாற்றத்தையும் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசினார்.
அஜித் குமாருடன் தான் பணியாற்றிய பல படங்களில் ‘தீனா’ திரைப்படம் மிக முக்கியமானது என்றும், ஏனென்றால் அந்த படத்தில்தான் அஜித் ‘தல’ என்று அழைக்கப்பட்டார் என்றும் சங்கர் குறிப்பிட்டார்.
அஜித் அமராவதி படம் முடித்த பிறகு, ‘ஆசை’ படத்திற்கு முன்னால், அப்போது தான் நான் ‘மகாநதி’ படத்தில் நடித்து முடித்திருந்தேன். எனக்கு அப்போது ஒரு விளம்பர படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஒரு பவுடர் டப்பா விளம்பர படப்பிடிப்பில் தான் அஜித் எனக்கு அறிமுகமானார். அவரும் அந்த விளம்பர படத்தில் நடித்தார்.
அஜித்துடன் மீண்டும் நேரடி தொடர்பு ஏற்பட்டது ‘பகைவன்’ படத்தில்தான். அதன் பிறகு அமர்க்களம் படத்தின் வாய்ப்பு கிடைப்பதற்கு முன், ஊட்டியின் படப்பிடிப்பில் இருந்தபோது அஜித் சாரும், இயக்குநர் சரணும் ஜீப்பில் வந்து தன்னை சந்தித்ததாகவும், அதன் மூலம் அமர்க்களம் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறினார்.
அமர்க்களம் படத்துக்கு பிறகு அஜித்தின் திருமணம் முடிந்து, அவர் ஷாலினியை மணந்த பிறகு, ‘தீனா’ படம் தொடங்கியது. தீனா அஜித்தின் திரை வாழ்க்கையை முழுவதுமாக மாற்றியது; சாக்லெட் பாயாக இருந்தவர் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார்.
21 வருடங்களுக்கு பிறகு ‘துணிவு’ படத்தின் போது அஜித்தை சந்தித்தபோது, அஜித் கேமராமேனிடம் தன்னை அறிமுகப்படுத்தி, “இவர்தான் என்னை முதல் முதல்ல ‘தல’ன்னு கூப்பிட்டார் என்று கூறி அறிமுகம் செய்தார். சங்கர் முதல் முதலில் அவரை ‘தல’ என்று அழைத்ததன் மூலம் தான், அஜித்துக்கு அந்த பட்டம் நிலைத்திருக்கிறது என்பதை அப்போதுதான் தெரிந்துகொண்டதாகவும், அந்த பட்டம் அஜித்துக்கு பொருத்தமாக அமைந்தது என்றும் உணர்ச்சிப்பூர்வமாக குறிப்பிட்டார்.
சீரியஸ் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த மகாநதி சங்கரை, காமெடி கலந்த வில்லனாக மாற்றியது இயக்குநர் செல்வா இயக்கிய ‘கோல்மால்’ திரைப்படம் என்று அவர் குறிப்பிட்டார்.
‘கோல்மால்’ படத்தில், ஒரு காட்சியில் அவரது பாத்திரம் அழுது புலம்ப வேண்டும் என்று இயக்குநர் சொல்ல, சங்கர் அந்த காட்சியை நடித்துக் காட்டினார். அந்த படம்தான் அவர் நடித்த முதல் காமெடி கலந்த அழுத காட்சி என்றும், அதன் பிறகு பல படங்களில் தான் காமெடி கேரக்டரில் நடித்ததாகவும் பேட்டியில் சங்கர் கூறினார்.
திரைத்துறையில் நீண்ட காலம் நீடிப்பதற்கு தனது தொழிலின் மீதுள்ள பக்தியே காரணம் என்று கூறிய சங்கர், தனது தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த ஆன்மீக அனுபவம் குறித்தும் பேசினார். தான் ஒரு காலத்தில் மதுவுக்கு அடிமையாக இருந்ததாகவும், அதனால் தனது குடும்பத்தை நரகத்தில் வைத்திருந்ததாகவும் மனம் திறந்து ஒப்புக்கொண்டார். அதன்பின் ஆன்மீகத்தை நாடி தான் குடியை விட்டதாகவும் அவர் கூறினார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
