சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஒரிஜினல் பெயர் சிவாஜி ராவ் என்று இருந்த நிலையில் ’அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடிக்க வந்த அவரை ரஜினிகாந்த் என்று பெயர் மாற்றியது இயக்குனர் இமயம் பாலச்சந்தர் என்பது தெரிந்ததே. இதன் பிறகு அவர் ஒரு சிலருக்கு பெயர் வைத்திருந்தாலும் அதில் முக்கியமான ஒருவர் தான் வில்லன் நடிகர் ஜீவா.
பிரபல கன்னட நடிகரான ஜீவா, கே பாலசந்தர் படத்தில் அறிமுகமான போது அவருக்கு தயா ரத்தினம் என்ற ஒரிஜினல் பெயர் இருந்தது. அவருக்கு ஜீவா என்று பெயர் வைத்த கே. பாலசந்தர் இதே பெயரில் நடி, பெரிய ஆளாக வருவாய் என வாழ்த்தினார்.
அவரது வார்த்தைக்கு கட்டுப்பட்டு ஜீவா பெயரில் பல தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்தார் ஜீவா. தமிழில் கே பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘எங்க ஊரு கண்ணகி’ என்ற திரைப்படத்தில் தான் ஜீவா வில்லனாக அறிமுகமானார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவானது. இரண்டு மொழிகளிலும் ஜீவா வில்லனாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் சரத் பாபு மற்றும் சரிதா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தை அடுத்து ஜீவா ஒரு சில தமிழ் படங்களில் தான் நடித்தார் என்றாலும் நூற்றுக்கணக்கான தெலுங்கு படங்களில் நடித்து அவர் பிரபலமானார். ’எங்க ஊரு கண்ணகி’ படத்தை அடுத்து ’நியாயம் கேட்கிறேன்’ என்ற படத்தில் இன்ஸ்பெக்டர் அசோக் என்ற கேரக்டரில் ஜீவா நடித்தார். தொடர்ந்து அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படமான ’நல்லவனுக்கு நல்லவன்’ என்ற படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து அர்ஜுன் நடித்த ’சங்கர் குரு’ திரைப்படத்தில் எத்திராஜ் என்ற கேரக்டரில் நடித்தார்.
அதன் பிறகு ’சொந்தக்காரன்’ ’அலெக்சாண்டர்’ ’மெட்ராஸ்’ ’வேட்டைக்காரன் ’பிரியமுடன் பிரியா’ ஆகிய படங்களில் நடித்தார். விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் அவர் சாண்டி என்ற கேரக்டரில் நடித்து மீண்டும் ஒரு என்ட்ரி கொடுத்திருந்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். ஒரு சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ள ஜீவா, பாலச்சந்தர் தான் தனக்கு பெயர் வைத்து திருப்புமுனையை ஏற்படுத்தியவர் என்பதால் ஜீவா தனது மகனுக்கும் பாலசந்தர் என்ற பெயர் வைத்தார். இவரது மகன் ஒரு சில தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.