தமிழ் தொலைக்காட்சியில் பிரபல ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக விளங்கி வருகிறது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 7 ஆவது சீசன் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் விசித்ரா, கூல் சுரேஷ், ஜோவிகா, மணி, நிக்சன் உள்ளிட்ட பலரும் போட்டியாளார்களாக களமிறங்கி உள்ளனர். ஒவ்வொரு எபிசோடுகளும் விறுவிறுப்பாக செல்ல சமீபத்தில் நடந்த டாஸ்க் ஒன்றில் தங்கள் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவம் குறித்து பேசும் படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அப்போது நடிகை விசித்ரா, திருமணத்திற்கு பிறகு தான் திரைப்படங்களில் நடிக்காமல் போனதற்கான அதிர்ச்சி காரணத்தை போட்டுடைத்துள்ளார். இது கேட்போர் அனைவரையும் அதிர்ச்சியிலும், கடும் வேதனையிலும் ஆழ்த்தி உள்ளது.
இதுகுறித்து விசித்ரா பேசுகையில், “தெலுங்கில் டாப் ஹீரோ ஒருவரின் படத்தில் நடிப்பதற்காக நான் சென்ற போது ஒரு ஹோட்டலில் பார்ட்டியில் கலந்து கொள்ள நேரிட்டது. அப்போது எனது வருங்கால கணவராக மாறியவரும் அங்கே தான் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். அந்த டாப் ஹீரோ என்னிடம் வந்து எனது பெயரை கூட கேட்காமல், ‘இந்த படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா?’ என கேட்டதுடன் ‘எனது அறைக்கு வாருங்கள்’ என மட்டும் குறிப்பிட்டார்.
அதை கேட்டதும் நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். அதற்கு அடுத்த நாளில் இருந்து எனக்கு நிறைய பிரச்சனைகள் வர ஆரம்பித்தது. அது என்னுடைய கெட்ட காலமா என தெரியவில்லை. குடித்து விட்டு எனது அறையின் கதவை தட்டி தொந்தரவும் செய்வார்கள். என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை. அடுத்து பல நாட்கள் தொந்தரவும் தொடர்ந்து கொண்டே இருந்தது. அப்போது அங்கே மேனேஜராக இருந்த எனது கணவர் (திருமணத்திற்கு முன்பாக) தான் உதவி செய்து என்னை தப்பிக்கவும் வழி செய்தார்.
அடுத்த சில நாளில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் அங்கும் இங்குமாக கூட்டத்திற்கு நடுவே ஓட, அதில் ஒரு ஆண் என் மீது தகாத முறையில் கைவைத்தார். முதலில் அது தவறுதலாக பட்டது என நான் நினைத்தேன். மீண்டும் அப்படியே நடக்க, மூன்றாவது முறை நடந்த போது கைவைத்தவரை நான் வசமாக பிடித்து விட்டேன். அவரை அழைத்து போய் நடந்த சம்பவத்தை ஸ்டண்ட் மாஸ்டரிடம் கூற, அவர் அந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்டை விட்டுவிட்டு என் கன்னத்தில் பளார் என அறைந்து விட்டார்.
அப்படி நடந்ததும் நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். யூனியனில் உள்ளவர்களும், நடிகர், இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர்களும் எனக்கு உதவி செய்யவில்லை. எனக்கும் கண்ணீரும், கோபமும் ஒருசேர பொங்கி எழுந்தது. தமிழ் சினிமாவில் ஒருமுறை கூட அப்படி நடந்ததில்லை. சங்கத்தில் புகாரளித்த பிறகும் உதவி செய்யாமல் போலீசிடம் செல்லும் படி அறிவுறுத்தினார்.
அதன் பின்னர் தான் சினிமா எதற்கு என தோன்றியது. பின்னர் தான் சினிமாவை விட்டு விலகி குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன். நான் அதை மறக்கணும்னு நினைக்குறேன். ஆறாத ரணம் மாதிரி அந்த சம்பவம் இருந்துச்சு” என கண்கலங்கிய படி விசித்ரா குறிப்பிட்டார். தமிழில் பிரபல நடிகையாக இருந்த விசித்ராவிற்கு தெலுங்கு சினிமாவில் இப்படி ஒரு அவலம் நடந்தது தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உண்டு பண்ணி உள்ளது.
இது தொடர்பான பதிவுகளில், யார் அந்த தெலுங்கு நடிகர் என ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களையும் குறிப்பிட்டு வருகின்றனர்.