17 வயதில் வாழ்க்கையை முடித்த ரஜினி பட ஹீரோயின்..17 படங்கள் மட்டுமே நடித்து தேசிய விருது வரை பெற்ற நடிகை

By John A

Published:

நடிகை ஷோபா பற்றி அறியாத 70‘s, 80‘s கிட்ஸ் கிடையாது. ஸ்ரீ தேவி போன்று மேக்கப்பே இல்லாமல் தனது இயல்பான அழகாலும், துறுதுறு அனுபவ நடிப்பிலும் திரையில் மின்மினிப்பூச்சியாய் தோன்றி மறைந்தவர் ஷோபா. தமிழில் குழந்தை நட்சத்திரமாக தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தில் அறிமுகமானார். சந்திரபாபு இந்தப் படத்தை தயாரித்து, இயக்கி நடித்தார்.

ஆனாலும் ஷோபா தனது 3 வயதிலலேயே மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கே.பாலச்சந்தரால் தமிழ்த்திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகையருள் ஷோபாவும் ஒருவர். அப்படம் “நிழல் நிஜமாகிறது”. அதில் “சுமித்ரா”தான் நாயகி என்றபோதிலும், ஷோபா, தன் இயல்பான நடிப்பால், அனைவரையும் கவர்ந்தார். நடிப்பில், தன்னைவிட பலமடங்கு அனுபவசாலியான சிவக்குமாருக்கு ஈடான நடிப்பை, சிறிய வயதிலேயே, அற்புதமாக வழங்கி, “ஏணிப்படிகள்” படத்தில் அசத்தியவர் ஷோபா.

வில்லனுக்கே வில்லனாக நடித்த தமிழ் சினிமாவின் சர்வாதிகாரி.. மிரட்டல் நடிப்பில் அதிர வைத்த நம்பியார்

இவரது பசி படம் இவருக்கு திருப்புமுனையக் கொடுத்தது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதினையும் பெற்றுக் கொடுத்தது. இதன் மூலம் இளம் வயதில் தேசிய விருது பெற்ற முதல் நடிகை என்ற பெருமையைப் பெற்றார் ஷோபா. ஆனால் அந்தப் புகழ் நிலைக்கவில்லை.

மேலும் முள்ளும் மலரும் படத்தை யாராலும் மறக்க முடியாது. பாசமலர் படத்திற்கு அடுத்தபடியாக அண்ணன்-தங்கையாக ரஜினியும், ஷோபாவும் இதில் வாழ்ந்திருப்பார்கள். மகேந்திரன் இயக்கிய இப்படம் இன்றும் ரஜினியின் முத்தான நடிப்பில் உருவான ஒரு படமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மூடுபனி, அழியாத கோலங்கள் போன்ற படங்கள் இவரது நடிப்புத் திறனுக்குச் சான்றான படங்களாகும். தன்னுடைய 16 வயதில், இயக்குநர் பாலுமகேந்திராவைக் காதல் மணம் புரிந்துகொண்ட ஷோபா, ஓராண்டிற்குள்ளாகவே, அவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, 17 வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

சிறிய வயதிலேயே காதல் திருமணம் செய்து, மிக குறுகிய கால கட்டத்திற்குள்ளாகவே, கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, தற்கொலை செய்துகொண்ட, முதல் மற்றும் ஒரே இந்திய திரைப்பட நடிகையும் ஷோபாதான்.

மொத்தத்தில் தான் வாழ்ந்த 17 ஆண்டுகளில் 17 படங்களில் மட்டுமே நடித்து இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறார் ஷோபா. ஷோபாவின் வாழ்க்கையைத் தழுவி, மலையாளத்தில், கே.ஜி.ஜாா்ஜ் “லேகாயுடே மரணம் ஒரு ப்ளாஷ்பேக்” என்ற படத்தை இயக்கியுள்ளார்.