பள்ளி மாணவர்கள் முதுகில் பந்தாடிய நடிகை : குணமா வாயில சொல்லணும்.அதுக்காக இப்படியா?

சென்னையில் குன்றத்தூர் பகுதியில் பள்ளி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ள அந்த வழியாகச் சென்ற நடிகை பொங்கியெழுந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை என்றாலே பேருந்தில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கு ரூட்தல மோதல் அடிக்கடி ஏற்படும். குறிப்பாக சென்னை நந்தனம் கல்லூரி, பச்சையப்பாஸ், ராயப்பேட்டை நியூ காலேஜ் போன்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அவ்வப்போது ரூட்தல மோதல்களில் ஈடுபட்டு சஸ்பெண்ட் ஆன  சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. காவல் துறையினரும், கல்லூரி நிர்வாகமும் பலமுறை எச்சரித்தும் மாணவர்கள் விரும்பத் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது பள்ளி மாணவர்களுக்கும் இந்தப் பழக்கம் தொற்றி கொண்டு வருகிறது. பேருந்தில் பயணம் செய்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு தூக்கமே வராது போல என்னும் அளவிற்கு படிக்கட்டுகளில் தொங்கி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் பல உயிரிழிப்பு சம்பவங்கள் அரங்கேறிய நிலையிலும் மாணவர்கள் அடங்கவில்லை.

அந்தவகையில் குன்றத்தூர் பகுதியில் நேற்று காலை வழக்கம் போல் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்த மாணவர்களைக் கண்டு பொங்கியெழுந்தார் நடிகை ரஞ்சனா நாச்சியார். கெருகெம்பாக்கம் அருகே பேருந்து சென்றபோது பேருந்தை மறித்து மாணவர்களை தனது பாணியில் கண்டித்தார். ஒருகட்டத்தில் ஒரு மாணவனை அடிக்க  பேருந்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

பெரியார், அண்ணா ரேஞ்சுக்கு TTF வாசனை புகழ்ந்த மஞ்சள் வீரன் இயக்குர் : வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

மேலும் அவர் தன்னை காவல்துறையைச் சார்ந்தவர் என்று கூறியதால் பேருந்தில் இருந்தவர்கள் யாரும் வாயைத் திறக்கவில்லை. ரஞ்சனா நாச்சியாரின் இந்த செயல் ஒருவகையில் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், மாணவர்கள் மேல் கையை வைத்தது தவறு என்றும் கண்டனக் குரல்கள் எழும்பி வருகின்றன.

ஒருகட்டத்தில் மாணவர்களை மட்டுமல்லாது ஓட்டுநர், நடத்துனரையும் வசைபாட பயணிகள் ஆடிப்போயினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நடிகை ரஞ்சனா நாச்சியார் பா.ஜ.க பிரமுகர் என்பதும் சட்டம் பயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தன்னுடைய மாமனார் மற்றும் குடும்பத்தினர் மீது வன்கொடுமை புகார் கொடுத்து அதிர வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. துப்பறிவாளன், இரும்புத்திரை, அண்ணாத்த, டைரி, நட்பே துணை போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.