மம்முட்டி, முரளி, அப்பாஸ் நடித்த ஆனந்தம் திரைப்படத்தை இயக்கி பெரிய வெற்றியைக் கொடுத்த இயக்குநர் லிங்குசாமி தனது அடுத்த படத்தை முற்றிலும் வேறு கதைக் களத்தில் இயக்கினார். அந்தத் திரைப்படம் தான் ரன். மாதவனுக்கு அலைபாயுதே படத்திற்குப் பின் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம்.
மேலும் மாதவைனை சாக்லேட் பாய் இமேஜிலிருந்து ஆக்சன் ஹீரோவாக மாற்றியது ரன் படம். படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். காமெடி சூப்பர் ஹிட். எல்லாவற்றிற்கும் மேலாக மீராஜாஸ்மின். அப்போதைய இளசுகளின் செம கிரஷ்ஷாக இருந்தார்.
ரன் படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் கூட்டணி மிகவும் பிரெஷ்ஷாக இருக்கும். படத்தின் பாடல்களை ரிபீட் மோடில் கேட்டுக் கொண்டிருந்தது இளைஞர் பட்டாளம். குறிப்பாக காதல் பிசாசே பாடல், மின்சாரம் என்மீது பாய்கின்றதே.., இச்சுத்தா.. இச்சுத்தா.. பாடல் போன்றவை மீரா ஜாஸ்மினுக்கு அதிக அளவு ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தப் படத்தின் வெற்றியால் தமிழ்சினிமாவில் சில ஆண்டுகள் முன்னனி நடிகையாகவும் திகழ்ந்தார் மீரா ஜாஸ்மின்.
இயக்குநர் லிங்குசாமி ரன் படத்தினையடுத்து விஷால், ராஜ்கிரண் நடித்த சண்டக்கோழி படத்தினை இயக்கும் பணிகளில் மும்முரமாக இருந்தார். அந்த சமயம் மீராஜாஸ்மின் இதனைக் கேள்விப்பட்டு இயக்குநர் லிங்குசாமியைச் சந்தித்திருக்கிறார். அப்போது அவரிடம் நீங்கள் அடுத்த படம் இயக்கப் போகிறீர்களாமே அந்தப் படத்தின் கதையைச் சொல்லுங்கள் என்று உரிமையுடன் கேட்டிருக்கிறார். அப்படத்தின் கதையைக் கேட்ட மீராஜாஸ்மினுக்கு மிகவும் பிடித்துப் போனது.
இந்தப் படத்தில் யார் ஹீரோயின் என்று கேட்டிருக்கிறார். இன்னும் முடிவாகவில்லை என்று லிங்குசாமி சொல்ல அப்போது நானே நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார் மீராஜாஸ்மின். நீங்கள்தான் ரன் படத்தில் நடித்து விட்டீர்களே வேறு யாரையாவது ஹீரோயினாக நடிக்கட்டும் என்று சொன்னாராம். அப்போது லிங்குசாமியிடம் மீராஜாஸ்மின் கோபப்பட்டு இந்தப் படத்தில் நான்தான் நடிப்பேன் என பிடிவாதம் பிடித்து நடித்தாராம்.
படம் வெளியாகி மீரா ஜாஸ்மினின் துறுதுறு கதாபாத்திரம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. தாவணி போட்ட தீபாவளியாய் மீண்டும் ரசிகர்கள் மனதில் ஜொலித்தார் மீரா ஜாஸ்மின்.