செகண்ட் இன்னிங்ஸ்-ல் பல நூறு நாள் படங்களைக் கொடுத்த கே.ஆர்.விஜயா.. தொட்டதெல்லாம் பொன் தான்..

By John A

Published:

தென்னிந்திய சினிமாவில் நடிக்க வந்த 10 ஆண்டுகளில் பெரும்புகழை கே.ஆர்.விஜயாவைத் தவிர எந்த நடிகையும் பெறவில்லை என்றே கூறலாம். புன்னகை அரசி என ரசிகர்களால் அழைக்கப்படும் கே.ஆர்.விஜயா கேரளா திருச்சூரில் பிறந்தாலும், பழனியில் தான் வளர்ந்தார்.

1960-ம் ஆண்டு கற்பகம் பட வாய்ப்பு வந்தது. அதில் ஹீரோயினாக நடித்த கே.ஆர்.விஜயாவுக்கு அடுத்த 20 ஆண்டுகள் சுக்கிரதிசைதான். நடித்த படங்கள் எல்லாம் பெரும் வெற்றி. சரோஜாதேவி, சாவித்திரி, ஜெயலலிதா போன்ற முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்தார் கே.ஆர்.விஜயா. குறுகிய காலத்திலேயே பெரும் புகழ் பெற்றார்.

சிவகார்த்திகேயனைப் பாராட்டிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அந்தக் காலத்து ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்த ஒரே நடிகை கே.ஆர்.விஜயா மட்டுமே. நீண்ட புருவமும், அழகிய கூந்தலும், வசீகரிக்கும் தோற்றமும் கொண்ட கே.ஆர்.விஜயாவுக்கு பல ரசிகர்கள் உருவாயினர். புகழின் உச்சியில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டார். இவரின் கணவர் வேலாயுதம். திருமணத்திற்குப் பின் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தவரை மனமாற்றம் செய்தவர் சாண்டே சின்னப்பத் தேவர்.

தான் தயாரித்த அக்கா-தங்கை என்னும் படத்தில் தங்கையாக கே.ஆர்.விஜயாதான் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணி அவரின் வீட்டிற்கே சென்று அவரை மீண்டும் நடிக்க அழைத்தார் தேவர். ஆனால் திருமணத்திற்குப் பின் நடிப்பதில்லை என்று கூறிய கே.ஆர்.விஜயாவை அவரின் கணவர் வேலாயுதம் தேவர் வார்த்தைகளுக்கு மரியாதை அளித்து மீண்டும் கே.ஆர்.விஜயாவை திரைத்துறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

அக்கா தங்கை படத்தில் அக்காவாக சவுகார் ஜானகி, தங்கையாக கே.ஆர்.விஜயா. நீண்ட இடைவெளி விழுந்ததால் சில நாட்கள் நடிக்க கஷ்டப்பட்டிருக்கிறார். அதன்பின் ஃபார்முக்கு வந்த கே.ஆர்.விஜயா செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்தார்.

முதலில் நடித்து வெற்றி பெற்ற படங்களைக் காட்டிலும் இரண்டாவது இன்னிங்ஸில் தங்கப்பதக்கம், பாரதவிலாஸ், இராமன் எத்தனை ராமனடி, நான் வாழ வைப்பேன், நல்ல நேரம், நான் ஏன் பிறந்தேன் போன்ற மெகாஹிட் படங்களில் நடித்தார். அதன்பின் அடுத்த தலைமுறை நடிகர்கள் வர அம்மா வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன்பின் பக்திப் படங்களில் நடித்தார். அம்மன் படம் என்றாலே அது கே.ஆர்.விஜயாதான் என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்களின் கண்களுக்கு அம்மனாகவே நடிப்பில் பிரகாசித்தார் கே.ஆர்.விஜயா. அந்தக் காலத்திலேயே சொந்தமாக ஹெலிஹாப்டர் வைத்திருந்திருக்கிறார் இந்தப் புன்னகை அரசி.