நடிகை, அரசியல்வாதி என பன்முகத்திறன்களைக் கொண்டவர் ஜெயப்பிரதா. இவரது இயற்பெயர் லலிதா ராணி. ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் 3.4.1962ல் பிறந்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், பெங்காலி, மராத்தி என பன்மொழிப்படங்களில் திறம்பட நடித்தவர். சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளார்.
ஜெயப்பிரதா 1974ல் பூமி கோசம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஸ்ரீஸ்ரீ முவ்வா, அடவி ராமுடு, சர்கம் மற்றும் சஞ்சோக் போன்ற படங்களில் நடித்ததற்காக அவர் அங்கீகாரம் பெற்றார். சோகமான மற்றும் உணர்ச்சிகரமான சிக்கலான கதாபாத்திரங்களில் உயிரோட்டமாக நடித்து பலதரப்பட்ட ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.
1980 மற்றும் 1990களில் ஜெயப்பிரதா இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். அந்த நேரத்தில் சிறந்த நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் பணிபுரிந்தார். கம்ச்சோர், ஷராபி, மேரா சாத்தி, தோஃபா, ஸ்வரக் சே சுந்தர், மற்றும் சௌட்டன் போன்ற படங்களில் அவரது நடிப்பை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது.
நடிகர் ஜீதேந்திராவுடன் பல வெற்றிப் படங்களில் நடித்தார். அந்துலேனி கதா, 47 நாட்கள், கவிரத்ன காளிதாசா, மற்றும் அக்னி சாக்ஷி என மாநில மொழிப்படங்களிலும் நடித்து அசத்தினார்.
ஜெயப்பிரதா 1990 களின் பிற்பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியில் (டிடிபி) சேர்ந்தார். அவர் 1996ல் ராஜ்யசபாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள ராம்பூர் தொகுதியில் மக்களவை, கீழ்சபை உறுப்பினரானார். ஜெயப்பிரதா பின்னர் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார்.
திரைப்படத் துறையில் ஜெயப்பிரதாவுக்குப் பல விருதுகளும், பாராட்டுகளும் கிடைத்தன. அவர் பல பிலிம்பேர் விருதுகள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். கலை மற்றும் சினிமா துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 2007ல் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.
ஜெயப்பிரதா அரசியல் மற்றும் நடிப்பு இரண்டிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பொது சேவை மற்றும் பொழுதுபோக்கு துறையில் தனது பாத்திரங்களைக் கச்சிதமாக செய்து வருகிறார். அவர் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார்.
தமிழ்ப்படங்களை எடுத்துக் கொண்டால் அவர் உலகநாயகன் கமலுடன் இணைந்து நடித்த சலங்கை ஒலியை இன்றளவும் யாராலும் மறக்கமுடியாது. மிகச் சிறப்பான, தரமான நடிப்பைக் கமலுக்கு இணையாகக் கொடுத்து விட்டார். அப்படிப்பட்ட உன்னதமான நடிப்பை வேறு எந்த நடிகையாலும் அவ்வளவு சீக்கிரத்தில் நடித்து விட முடியாது.
கமலுக்குள் இருக்கும் கலை உணர்வுத் தாகத்தை, அந்த உன்னதமான நாட்டியத்தை உலக அரங்கில் எப்படியாவது வெளிப்படுத்தி விட வேண்டும் என்று முனைப்புடன் செயல்படும் ஜெயப்பிரதாவின் உத்வேகம் படம் பார்ப்பவர்களின் உள்ளங்களில் ஒரு உள்ளக்கிளர்ச்சியை உண்டு பண்ணிவிடும்.
எல்லாவற்றிற்கும் மேலாக அவர் முகத்தில் இருந்து வெளிவரும் உணர்ச்சி வெளிப்பாடு ரசனை கலந்தது. சோகம், காதல், மோகம், தாகம், பரிதாபம் என பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றிருந்தார் ஜெயப்பிரதா. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அவரது உன்னதமான நடிப்புக்கு இந்த ஒரு படம் போதுமானது.