பாக்யராஜின் ஆஸ்தான நடிகை.. ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி.. அரசியல், சினிமா என இரண்டிலும் தடம்பதித்த பிரபலம்..

By Bala Siva

Published:

சினிமாவில் மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் பெயர் எடுத்து தங்கள் பயணத்தின் அடுத்த படியாக அரசியலுக்குள் நுழைந்தவர்கள் ஏராளம். இதில் எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட பலர் வெற்றி பெற்றிருந்தாலும் சிலர் அதில் தோல்விகளை கண்டும் ஒதுங்கி உள்ளார்கள்.

இந்த நிலையில், சினிமாவில் சாதித்து பின்னர் அரசியலிலும் தற்போது ஒரு ரவுண்டு வரும் சி. ஆர். சரஸ்வதியை பற்றிக் காணலாம். நடிகை சி ஆர் சரஸ்வதி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அவர் கடந்த 1979 ஆம் ஆண்டு கே பாக்யராஜ் இயக்கிய முதல் திரைப்படமான சுவரில்லாத சித்திரங்களில் தான் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் பல பாக்யராஜ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முதல் படத்திலேயே அவர் சுதாகரின் அம்மாவாக நடித்திருந்தார். அப்போது அவருக்கு மிக இளவயதாக இருந்தாலும், இந்த படத்தில் அவரது நடிப்பிற்கு நல்ல பெயர் கிடைத்ததையடுத்து அவருக்கு தொடர்ச்சியாக குணச்சித்திர கேரக்டர்களில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது.

cr saraswathi1

ஆரம்பத்தில் ஒருசில மலையாள படங்களில் நடித்த சிஆர் சரஸ்வதி, அதன் பின்னர் 8 வருடங்கள் கழித்து மீண்டும் பாக்யராஜ் இயக்கத்தில் உருவான ’எங்க சின்ன ராசா’ என்ற திரைப்படத்தில் கிட்டத்தட்ட வில்லி கேரக்டரில் நடித்தார். அந்த படத்தில் அவர் பாக்யராஜ் அம்மாவாக நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் பாக்யராஜையே கொலை செய்யும் அளவுக்கு துணியும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.

இதனையடுத்து மீண்டும் பாக்யராஜ் நடித்த ’அம்மா வந்தாச்சு’ விஜயகாந்த் நடித்த ’காவிய தலைவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவரது திறமையை முழுமையாக வெளியே கொண்டு வரும் வகையில் பாக்யராஜ் மீண்டும் ஒரு கேரக்டர் கொடுத்தார் என்றால் அது ’ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ என்ற படத்தில் தான்.

இந்த படத்தை தொடர்ந்து அவர் மீண்டும் பாக்யராஜ் இயக்கத்தில் உருவான ’இது நம்ம ஆளு’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தில் ஒரு சிறு கேரக்டர் தான் என்றாலும் அதில் அவர் ரசிகர்களை கண்ணீர் வரவழைக்கும் ஒரு அற்புதமான கேரக்டரில் நடித்திருந்தார்.

cr saraswathi

இதன் பின்னர் சிவப்பு நிலா, சின்னத்துரை, என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற படங்களில் நடித்த சிஆர் சரஸ்வதி, கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம் திரைப்படத்தில் சினேகாவின் அம்மாவாக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். 2008 ஆம் ஆண்டு வெளியான பரத் நடித்த பழனி என்ற திரைப்படத்தில் காஜல் அகர்வால் அம்மாவாக நடித்த நிலையில் அதன்பின்னர் அவர் வேறு திரைப்படங்களில் நடிக்கவில்லை.

நடிகை சரஸ்வதி நடிகையாக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் இருந்தார். கடந்த 1999 ஆம் ஆண்டு அவர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். அதன் பின்னர் அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அதிமுகவின் பேச்சாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக உடைந்த நிலையில் சி.ஆர் சரஸ்வதி டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். 2018 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அவர் அந்த கட்சியில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகம், அரசியல் என இரண்டு துறைகளிலும் தனது முத்திரையை பதித்து இருக்கும் சி.ஆர். சரஸ்வதி வரும் தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: actress, ADMK