தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளாக மாறியவர்கள் ஏராளமானோர் இங்கே உள்ளனர். அந்த வரிசையில் மிக முக்கியமான நடிகை தான் அஞ்சு. நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய நிலையில் அதன் பிறகு பல படங்களில் ஹீரோயின் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்துள்ளார்.
மகேந்திரன் இயக்கத்தில் உருவான ’உதிரிப்பூக்கள்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகை அஞ்சு அறிமுகம் ஆனார். அதன் பிறகு அவர் ரஜினி நடித்த ’பொல்லாதவன்’ கமல்ஹாசன் நடித்த ’மீண்டும் கோகிலா’ உள்பட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
குறிப்பாக கே பாக்யராஜின் ’டார்லிங் டார்லிங் டார்லிங்’ என்ற திரைப்படத்தில் பூர்ணிமா ஜெயராமனின் குழந்தை நட்சத்திர கேரக்டரில் நடித்திருப்பார். மேலும் ’பொய் சாட்சி’ ’அழகிய கண்ணே’ ’அன்புள்ள மலரே’ உள்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அஞ்சு, ’முந்தானை சபதம்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்
ஆனால் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்த படம் என்றால் அது ’கேளடி கண்மணி’ திரைப்படம் தான். வசந்த் இயக்கத்தில் எஸ்பி பாலசுப்ரமணியம், ராதிகா நடித்த படத்தில் ரமேஷ் அரவிந்த் ஜோடியாக அஞ்சு நடித்திருப்பார். இந்த படத்தில் அவரது இயல்பான நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.
‘கேளடி கண்மணி’ படத்தின் வெற்றியை அடுத்து அவர் ’அரங்கேற்ற வேளை’ ’அக்னி பார்வை’ ’அபிராமி’ ’பிரதாப்’ ’புருஷ லட்சண’ம் உள்பட பல படங்களில் இரண்டாவது கதாநாயகி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்தார். மேலும் அவர் விஜய், ரம்பா நடித்த ’என்றென்றும் காதல்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்.
பிரசாந்த் நடித்த ’பூமகள் ஊர்வலம்’ கார்த்திக் நடித்த ’உனக்காக எல்லாம் உனக்காக’ வெங்கட் பிரபு நடித்த ’உன்னை சரணடைந்தேன்’ உள்பட படங்களில் நடித்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் தயாரிப்பில் உருவான ’மதயானைக்கூட்டம் படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் அஞ்சு நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமின்றி அவர் ஏராளமான மலையாள படங்கள் மற்றும் ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் கூட நடித்துள்ளார். அதன் பிறகு அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக ராதிகா நடித்த ’சித்தி’ சீரியலில் வைதேகி என்ற கேரக்டரில் அசத்தலாக நடித்திருப்பார். ’அகல் விளக்கு’ ’அரசி’ ’செல்வி’ ’ஈரமான ரோஜாவே’ ’இதயத்தை திருடாதே’ போன்ற சீரியல்களில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
நடிகை அஞ்சு கடந்த 1996 ஆம் ஆண்டு கன்னட நடிகர் டைகர் பிரபாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரே வருடத்தில் அவர் தனது கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டார். ருக்மணி என்ற மலையாள திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு கேரள அரசு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.