தமிழ் சினிமாவின் ஆரம்பத்தில் இருந்தே எப்போதும் இரு நடிகர்களின் ரசிகர்களுக்கு மத்தியில் ஒருவித போட்டி இருந்து கொண்டே இருக்கும்.
எம்ஜிஆர் Vs சிவாஜி, ரஜினி Vs கமல், அஜித் Vs விஜய், விக்ரம் Vs சூர்யா, சிவகார்த்திகேயன் Vs விஜய் சேதுபதி என இந்த காலத்து சினிமா நடிகர்கள் வரை ஒருவித போட்டி இருந்து கொண்டே தான் இருக்கிறது.
அவர்களுக்கு இடையே நட்பாக இருந்தாலும் கூட, அவர்களின் ரசிகர்கள் சுவாரஸ்யத்திற்காக ஒரு போட்டியை வேண்டுமென்றே தங்களுக்கு விருப்பமான கலைஞர்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களிலும், பொது வெளியிலும் கருத்துக்களை குறிப்பிடுவார்கள்.
இப்படி இருந்த ரசிகர்களின் போட்டிகளுக்கு மத்தியில் அதிக காலம் தொடர்ந்து நீடித்து கொண்டே இருக்கும் சண்டை என்றால் அது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே நடைபெறும் சண்டைகள் தான். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரின் ரசிகர்களுக்கு இடையேயான War நீடித்து வருகிறது. இது பெரிய அளவில் பிரச்சனைகளை உண்டு பண்ணாத வகையில் அமைந்திருந்தாலும் இணையவாசிகள் மத்தியில் ஒரு சுவாரஸ்யத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படி இருக்கையில், ரசிகர்களை தாண்டி விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் தங்களின் திரைப்படங்களில் சில வசனங்கள் மற்றும் பாடல்கள் மூலம் மோதிக் கொண்டது தொடர்பான தகவல்கள் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய முதல் திரைப்படமான தீனாவில் அஜித் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் தான் ‘தல’ என்ற பட்டமும் அஜித்திற்கு வந்து சேர்ந்தது. ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’ என்ற பாடல் இடையே “தல இருக்கும் போது வால் ஆடக்கூடாது” என மகாநதி சங்கர் கூறுவார். இது நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்குவது போன்று அமைந்திருந்தது.
மேலும், இதற்கு பதில் சொல்லும் வகையில், விஜய் நடித்த புதிய கீதை திரைப்படத்தில், “உன் தல, வாலு, முண்டம் எல்லாத்தையும் கூட்டிட்டு வா” என அவர் பேசும் வசனம் அமைந்திருந்தது. இப்படி அடுத்தடுத்த திரைப்படங்களில் வசன ரீதியாக மோத, விஜய்யின் திருமலை மற்றும் அஜித்தின் ஜனா படத்தில் வந்த வசனங்கள் இன்னும் அடுத்த கட்டத்திற்கு இந்த மறைமுக மோதலை எடுத்துக் கொண்டு சென்றது.
“வாழ்க்கை ஒரு வட்டம்டா, அதுல ஜெயிக்குறவன் தோப்பான், தோக்குறவன் ஜெயிப்பான்” என விஜய் திருமலையில் பேசி இருப்பார். இது இந்த காலம் வரை ட்ரெண்டிங்கில் இருக்கும் டயலாக் ஆகும். இதற்கு பதில் சொல்லும் விதமாக ஜனா திரைப்படத்தில், “என் வாழ்க்கை வட்டமோ, சதுரமோ கிடையாது. நேர்கோட்டுல போய்கிட்டே இருப்பேன்” என அஜித் பேசியிருந்தது இன்னும் பரபரப்பை அந்த காலத்தில் கிளப்பி இருந்தது.
டயலாக்கில் மோதிக்கொண்ட இருவரும் பாடல்களிலும் மோதிக் கொண்டனர். அந்த வகையில், ‘இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன’ என அஜித் ஒரு பக்கம் பாட, ‘ஒரு தடவை ஜெயிப்பதெல்லாம் சரித்திரம் ஆகாது’ என சச்சின் பாடலில் போட்டு தாக்கி இருப்பார் விஜய். நடனங்களில் கூட ஒருவரை ஒருவர் இமிடேட் செய்ய, இறுதியில் திருப்பாச்சி படத்தில் வரும் பாடலில், இதற்கு எண்டு கார்டு போடும் வகையில் விஜய் பாடி இருப்பார்.
‘நீ எந்த ஊரு, நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல’ என தொடங்கி, ‘உன்னை யாரோ பெத்திருக்கா, என்னை யாரோ பெத்திருக்கா.. ஆனாலும் நீயும், நானும் அண்ணன் தம்பிடா” என்ற வரிகள் வரும். இப்படி பாடல்கள், வசனங்கள், நடனம் என மறைமுகமாக அஜித் மற்றும் விஜய் ஆகியோர் மோதிக்கொண்டது தொடர்பான தகவல்கள் இன்றளவிலும் Evergreen தகவலாக வலம் வந்த வண்ணம் உள்ளது.