ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. பல இடங்களில் பணிபுரிந்து பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் கடைசியாக கை நிறைய சம்பளத்துடன் துபாயில் தான் பணியாற்றிய வேலையையும் உதறி சினிமாவிற்குள் வந்தவர்.
இன்று ஹீரோ,வில்லன், குணச்சித்திரம் என்று அத்தனை வேடங்களையும் ஏற்று கலக்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் பாலிவுட்டிலும் கால் பதித்து ரஜினி, கமல், ஷாரூக்கான், விஜய் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கும் வில்லனாக நடித்துப் பெயர் பெற்றார்.
அதே வேளையில் 96, தர்மதுரை, நானும் ரவுடிதான், விவசாயி போன்ற படங்களிலும் நடித்து ஹீரோவாக தன்னுடைய நடிப்புத்திறனை வெளிக் கொண்டு வந்திருக்கிறார். இயல்பான நடிப்பில் எந்தக் கதாபாத்திரத்திற்கும் பொருந்தக் கூடிய ஒரு கலைஞனாக விஜய் சேதுபதி சினிமாவில் ஜொலிக்கிறார். இன்று ஒரு படத்திற்கு 12 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் இவரின் சினிமா பயணம் வெறும் 250 ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்திருக்கிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளதா?
விஜய் சேதுபதி முதன் முதலாக அசோக் ஹீரோவாக நடித்த ‘முருகா‘ என்ற படத்தில் ஜுனியர் ஆர்டிஸ்டாக நடித்துள்ளார். அந்தப் படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் ரூ.250.
பின்னர் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்திலும் ஜுனியர் ஆர்டிஸ்டாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் ரூ.400. பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி குறிப்பிடும் போது நான் சினிமாவில் நேரிடையாகப் பார்த்த முதல் ஹீரோ ஜெயம் ரவி தான் என்றுகூட கூறியிருக்கிறார். இப்படி படிப்படியாக தனது கேரியரை துவக்கிய விஜய் சேதுபதி பின்னர் புதுப்பேட்டை படத்தில் தனுஷூடன் ஒரு காட்சியில் நடித்திருப்பார்.
அதன்பின் சில குறும்படங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு இயக்குநர் சீனு ராமசாமி முதன்முதலாக ஹீரோவாக தென்மேற்குப் பருவக் காற்று படத்தில் அறிமுகப் படுத்த அந்தப் படம் விஜய் சேதுபதிக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது.
தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் விஜய் சேதுபதியின் திறமையை பீட்சா படத்தில் காட்ட முன்னனி நட்சத்திரமாக உயர ஆரம்பித்தார். அதன்பின் மளமளவென படங்களில் நடித்துக் குவித்த விஜய் சேதுபதி தற்போது ஒரு படத்திற்கு 12 கோடி வரை சம்பளம் பெறுவதாக சினிமா வட்டராங்கள் தெரிவிக்கின்றன.