நடிகர் சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா, ஏழ்மையால் கல்வி கற்க முடியாமல் கஷ்டப்படும் மாணவர்களுக்காக அகரம் என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வருகிறார். சூர்யாவின் இந்த அறக்கட்டளை மூலமாக கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் முதல் தலைமுறை பட்டதாரிகளாக உருவாகியுள்ளனர்.
இந்நிலையில் அகரம் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இன்ஸ்டாகிராம் கணக்கு மீட்கப்படும் வரை யாரும் எந்த நிதி உதவியும் செய்ய வேண்டாம் என்றும், எந்த வித குறுச்செய்தியை அனுப்ப வேண்டாம் என்றும் அகரம் அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து பிற சோசியல் மீடியா மூலமாக நன்கொடையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாராவது தொடர்பு கொண்டு கேள்விகளை எழுப்பினால் பதிலளிக்க வேண்டாம் என்றும், பிரச்சனையை சரி செய்ய முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையுலகினர் பலரும் அறக்கட்டளைகளை நடத்தி வந்தாலும், குழந்தைகளின் கல்விக்கான சூர்யா நடத்தி வரும் அறக்கட்டளை இப்படி அடையாளம் தெரியாத நபர்களால் முடக்கப்பட்டது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.