நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையின் சூப்பர் ஹிட் படமாக அமைந்த காதலுக்கு மரியாதை படத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்து இன்று தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முக்கிய நடிகராக இருக்கிறார் சூரி. சினிமா வாய்ப்புத் தேடி மதுரையிலிருந்து சென்னை வந்து எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து பல போராட்டங்களுக்குப் பிறகு ஜுனியர் நடிகராக வாய்ப்புப் பெற்று பின் தனது அசாத்திய திறமையால் இன்று வெற்றிமாறனின் ஹீரோவாக வரும் அளவிற்கு தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறார் சூரி.
காதலுக்கு மரியாதை படத்தினைத் தொடர்ந்து மறுமலர்ச்சி, சங்கமம், ரெட், ஜி என பல படங்களில் நடித்தவர் வின்னர் படத்தில் வடிவேலுவுடன் நடித்து அடையாளம் காணப்பட்டார். தொடர்ந்து வாய்ப்புத் தேடி வந்தவர் இயக்குநர் சுசீந்தரனைச் சந்தித்து வாய்ப்புக் கேட்டிருக்கிறார். இவர் இயக்குநர் சுசீந்திரனைச் சந்தித்த போது அவர்தான் இயக்குநர் எனத் தெரியாமல் உதவி இயக்குநர் என நினைத்து, “எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க என்று கேட்டிருக்கிறார்.”
சுசீந்திரன் உங்களுக்கு ஒரு காட்சி உள்ளது என்று கூறிய போது, நீங்கள் இயக்குநரிடம் சொல்லி எப்படியாவது நடிக்க வாய்ப்புக் கொடுங்கள் என்று கேட்க, நான் தான் இயக்குநர் போய் உட்காருங்கள். உங்களுக்கு தினமும் காலை சாப்பாடு வந்துவிடும். உங்களுக்கும் ஒரு காட்சி உள்ளது என்று கூறி வெண்ணிலா கபடிக் குழுவில் நடிக்க வைத்திருக்கிறார்.
படத்தில் இடம்பெற்ற புரோட்டா காட்சியில் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் அண்மையில் மறைந்த நடிகர் வைரவன் தான். ஏனெனில் அவர் சற்று பருமனாக இருந்ததால் புரோட்டா காட்சியில் அவர்தான் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணியிருக்கின்றனர். அதன்பின் சுசீந்திரன் சற்று இளகிய உடல் கொண்டவர் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணி அதன்பின் சூரியை நடிக்க வைத்திருக்கிறார்.
அந்தக் காமெடிக் காட்சி சூரியின் ஒட்டுமொத்த திரை வாழ்க்கையையே மாற்றும் என அவர் அறியவில்லை. அதன்பின் அவருக்கு குபேர யோகம் அடிக்க முன்னணி நடிகர்கள் படங்கள் அனைத்திலும் காமெடியான நடித்துப் புகழ் பெற்றார். விடுதலை படத்தில் வெற்றிமாறன் இவரின் நடிப்புத் திறனை வெளிக் கொணர தற்போது கதையின் நாயகனாக நடித்து வருகிறார் சூரி.
ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.
