சிவாஜி முதன்முதலாக நடித்த வேடம் எது தெரியுமா? நடிப்புல இவ்ளோ விஷயங்கள் இருக்கா….!

By Sankar Velu

Published:

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பு பற்றி விலாவரியாகவும், தௌ;ளத்தெளிவாகவும் புட்டு புட்டு வைத்துள்ளார். தன் சிறுவயது நினைவுகளைப் பற்றியும், நடிப்பு குறித்தும் சிவாஜி இவ்வாறு எழுதியுள்ளார். அதன் முழுவிவரம் இதோ…

நான் சிறுவனாக இருந்தபோது ஒடிந்து விழுவது போலத் தான் இருப்பேன். உடலில் சதை அதிகம் இருக்காது. முகத்தில் பெரிதாக விழிகள் மட்டும் தான் இருக்கும். இந்த விழிகளைப் பார்த்துத் தான் மூக்கும் முழியும் பையனுக்கு நன்றாக இருக்கிறது என நாடகக் கம்பெனியில் சேர்த்துக் கொண்டனர். கம்பெனியில் எங்கள் ஆசிரியர் சின்ன பொன்னுச்சாமி பிள்ளை என்னைப் பார்த்துப் பையன் குறுகுறுன்னு இருக்கான். நல்ல முழிகள் இருக்கு என்று சொல்லி கிருஷ்ணர் வேஷத்தை முதலில் கொடுத்தார்.

Sivaji
Sivaji

அடுத்ததாக சூர்ப்பனகை வேஷத்தைக் கொடுத்தார். கண்களால் தான் நிறைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும். இப்படிப்பட்ட வேடங்களைக் கொடுத்தால் நன்றாகச் செய்வான் என்று அப்போது அவர் நினைத்தார். நடிக்கும்போது அவ்வப்போது என்னை அழைத்து நடிக்கும்போது கண்ணை நல்லா உருட்டிப் பாருன்னு சொல்வாரு.

நான் என் கண்களை விரித்து அப்படி இப்படிப் பார்த்து கரகோஷம் வாங்குவது உண்டு. ஆனால் இம்மாதிரி தேவைப்படும்போது தேவையான அளவுக்கு உணர்ச்சிகளைக் கொட்டவும், அதற்கேற்ப அங்க அவயங்களை உபயோகிக்கவும் பல நாள் பயிற்சி பெற வேண்டும். எடுத்த எடுப்பிலேயே வந்துவிடாது. எந்த வேடமானாலும் எடுத்த அதைப் பலமுறை மனதிற்குள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

கற்பனைகளை அப்பாத்திரத்தை உருவகப்படுத்தி வாழ்க்கையில் அப்பாத்திரங்களைப்போல் அவன் சந்தித்தவர்களை எண்ணிப்பார்த்து மனக்கண் முன் கொண்டு வர வேண்டும். பின் அம்மாதிரி நடிக்கக் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்ய வேண்டும்.

Sivaji33
Sivaji33

இம்மாதிரி பயிற்சி தான் ஒத்திகை. பல் துலக்கும்போது, முகச்சவரம் செய்யும் போது, குளிக்கும்போதும் எப்படி எல்லாம் முகபாவங்கள் மாறுகின்றன என்பதை எல்லாம் ஒரு நடிகன் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் அவனுக்கு அந்த உணர்ச்சிகளையும், பாவங்களையும் காட்டக்கூடிய சந்தரப்ப்ம் எந்தக்கட்டத்திலும் எந்தப் படத்திலும் வரலாம். இதற்கெல்லாம் தனித்தனியாக ஒத்திகைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?

எந்த ஒரு நடிகனுக்கும் தன் வேடத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க அமைதியான சூழல் முக்கியம். தனிமையில் அமைதியாக இருக்கும்போது தான் நடிக்க இருக்கும் வேடம்; குறித்து உருவகப்படுத்திப் பார்க்க முடியும். ஒரு எழுத்தாளனுக்குத் தனிமை எப்படி முக்கியமோ அது போல நடிகனுக்கும் முக்கியம். பெரும்பாலும் குளியலறைகளில் தனிமையில் இருக்கும்போது தான் அன்று செய்ய வேண்டிய வேடத்தைப் பற்றி சிந்திப்பேன்.

Sivaji Ganesan
Sivaji Ganesan

என் மனதிற்குள்ளேயே பலமுறை ஒத்திகைப் பார்த்துக்கொள்வேன். இது என் வேலையை சுலபமாக்கி விடும். ஆள்பாதி ஆடை பாதி என்பர். வெறும் வேடம் மட்டும் நடிகனுக்கு உதவாது. வேடத்திற்குப் பொருத்தமான உடை அணிய வேண்டும். ராஜா வேடம் போட வேண்டும் என்றால் பட்டாடை அணிந்து தலையில் கிரீடம் வைத்துக் கொள்ள வேண்டும். அரக்கன் வேடம் என்றால் மீசை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

நடிக்கும் கதாபாத்திரங்களுக்கும் குணாதிசயங்களுக்கு ஏற்ற மாதிரி உடை அணிய தெரிந்து இருக்க வேண்டும். வேடம், உடை, உருவம் மூன்றும் இருந்தால் போதாது. போட்டிருக்கும் வேடத்திற்கு ஏற்ப உணர்ச்சிகளையும் கொண்டு வர வேண்டும். நடிகனின் பணி அப்போது தான் முற்றுப்பெறுகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.