ஒரே இடம்.. ஒரே நடிகைதான்.. ஆனா துணை நடிகராக இருந்து அவருக்கே ஜோடியான நடிகர் ஷாம்..

By John A

Published:

தமிழில் அர்விந்த் சாமி, மாதவன் ஆகியோருக்கு அடுத்தபடியாக சாக்லேட் பாய் என்று வர்ணிக்கப்பட்ட ஹீரோதான் நடிகர் ஷாம். மதுரையில் பிறந்த ஷம்சதீன் இப்ராஹிம் என்ற ஷாம் பார்ப்பதற்கு வட இந்திய மொழி ஹீரோ போன்று இருப்பார். பெங்களுரில் தனது கல்வியை முடித்த ஷாம் அதன்பின் மாடலிங்கில் ஈடுபட்டார். அதன்பின் மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவாவினைச் சந்தித்து சினிமா வாய்ப்பு கேட்டிருக்கிறார். அதன்படி நடிகர் ஷாமுக்கு முதல் படமாக 12பி அமைந்தது.

எனினும் 12 பி திரைப்படம் 2001-ல் தான் வெளிவந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே காதலர் தினம் படத்தின் ஆடிஷனில் கலந்து கொண்ட ஷாமுக்கு அப்போது வாய்ப்பு கிட்டவில்லை. இதற்கு அடுத்ததாக இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவின் இரண்டாவது படமான குஷி திரைப்படத்தில் ஒரு சிறப்புக் காட்சியில் விஜய்யின் நண்பனாகத் தோன்றினார்.

சென்னை மக்களே கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்கத் தயாரா? வரப்போகுது செம்பொழில் கிராமத்து திருவிழா

சென்னை அஷ்டலட்சுமி கோயிலில் முதன் முதலாக ஜோதிகாவினை விஜய் பார்க்கும் காட்சியில் விஜய்யுடன் நடித்திருப்பார் ஷாம். ஆனால் காலம் அவரை எங்கே கொண்டு சென்றது தெரியுமா? அதே அஷ்டலட்சுமி கோயிலில் அதேபோன்று ஒரு காட்சியில் 12 பி படத்தில் ஜோதிகாவை ஜோ எனக் கூப்பிடும் காட்சியில் நடித்திருப்பார் ஷாம். முதல் படத்தில் துணை நடிகராக நடித்த ஷாம். அடுத்தபடத்தில் ஹீரோவாக அதே அஷ்டலட்சுமி கோயிலில், அதே ஹீரோயினுக்கு ஜோடியாக நடித்தார்.

12பி படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்து ஷாமுக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இயற்கை, உள்ளம் கேட்குமே, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, ஏபிசிடி, பாலா, லேசா லேசா போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தார். பெரும்பாலும் ஷாம் படத்தில் பாடல்கள் அனைத்தும் ஹிட் பாடல்களாகவே அமைந்தன. இதனால் இளசுகள் மத்தியில் ஃபேவரிட் ஹீரோவாகத் திகழ்ந்தார் ஷாம்.

அதன்பின் இவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. எனினும் அடுத்த இன்னிங்ஸை தில்லாங்கடி படத்தின் மூலம் தொடங்கினார். இதில் செகண்ட் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவர், தொடர்ந்து புறம்போக்கு என்கிற பொதுவுடமை, மீண்டும் விஜய்யுடன் வாரிசு போன்ற படங்களில் நடித்தார். இவர் நடித்த 6 மெழுகுவர்த்திகள் திரைப்படம் விமர்சன ரீதியாகப் பாராடைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.