நடிகர் சசிகுமார் தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பல அவதாரங்களில் கால் பதித்து வலம் வருபவர். பாலா, அமீர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர் சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் ஆனார்.
முதல் படமே மாஸ் ஹிட் ஆக, அதன்பின்னர் இவர் நடித்த நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன், தாரை தப்பட்டை, வெற்றிவேல் எனத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள் 2 பெரிய அளவில் வெற்றி பெற்றது.
தற்போது கொம்பு வெச்ச சிங்கம்டா, ராஜ வம்சம், நா நா, பரம குரு, எம்ஜிஆர் மகன் என்னும் 5 படங்களை கையில் வைத்து பிசியாக இருந்துவந்த இவர் ஊரடங்கினால் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளார்.
ஆனால் இந்த ஊரடங்கு காலத்திலும் வீணாகப் பொழுதுபோக்காமல், மதுரையில் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்
அவர் மைக்கில் பேசியதாவது, “நாம் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸ்காரர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பணி செய்கிறார்கள். நாம் நிச்சயம் அவர்களின் தியாகத்தினை உணர வேண்டும். அவர்களுக்கும் நம்மைப் போல் ஒரு குடும்பம் உள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
அவர்களுக்காக நாம் செய்யும் ஒரே உதவி வீட்டில் இருப்பது மட்டும் தான். தயவு கூர்ந்து இதை செய்யுங்கள்” என்று சசிகுமார் தனக்கே உரித்தான ஸ்டைலில் கேட்டுள்ளார்.