இயக்குநரும், நடிகருமான சசிக்குமாருக்கு அவரின் திரை வாழ்விலேயே மிகப்பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்த திரைப்படம் என்றால் அது அயோத்தி தான். எந்த வித விளம்பரங்களுமின்றி, எதிர்பார்ப்புகளுமின்றி வெளிவந்து சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியது அயோத்தி திரைப்படம். விமர்சனத்திலும், வசூலிலும், நல்ல வரவேற்பினைப் பெற்ற அயோத்தி திரைப்படத்தினை புது இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கியிருந்தார்.
சசிக்குமார், புகழ், யாஷ்பால் ஷர்மா ஆகியோரின் இயல்பான நடிப்பும், வலுவான கதையும், படத்தினைக் கொண்டாட வைத்தது. அயோத்தி திரைப்படத்தினைப் பார்த்தவர்கள் யாரும் நெகடிவ் விமர்சனங்களே முன் வைக்காத அளவிற்கு படம் வரவேற்பினைப் பெற்றது.
இயக்குநர் மந்திரமூர்த்தி இந்தக் கதையைத் தயார் செய்து பல தயாரிப்பாளர்களைத் தேடி அலைந்திருக்கிறார். யாருமே தயாரிக்க முன்வராத தருணத்தில் டிரைடன்ட் ஆர்ட்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் கடைசியாக முன்வந்தது. இந்தக் கதையை தயாரிப்பாளர் அலுவலகத்தில் உள்ள அனைவருமே கேட்டனர். தயாரிப்பாளருக்கு மிகவும் கதைபிடித்துப் போனது இருப்பினும் டாக்குமெண்டரி படமாக வந்து விடும் எனவே சற்று கமர்ஷியலை சேர்த்து எடுப்பதாக இருந்தால் தயாரிக்கிறேன் என்று கூற இயக்குநர் மந்திர மூர்த்தியும் ஒப்புகொண்டு படத்தினை இயக்கினார்.
படத்திற்கு சசிக்குமார் தான் ஹீரோ என்பதில் உறுதியாக இருந்ததால் தயாரிப்பு நிறுவனம் சசிக்குமாரை அழைத்துப் பேச அவரும் உடனே ஒகே சொல்லி நான்கு வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட கதை உடனடியாக ஷுட்டிங்குக்கு தயாரானது. படத்தில் சசிக்குமார் கதாபாத்திரத்தின் பெயரானது கடைசி வரை தெரியாது.
கிளைமேக்ஸ் காட்சியில் தான் அவர் பெயர் அப்துல் மாலிக் என்பது தெரிய வரும். இந்தப் பெயரை படத்தில் வைத்தது சசிக்குமார் தானாம். முஸ்லீம் பெயர் வேண்டும் என்பதால் ஏற்கனவே பேட்ட படத்தில் ரஜினியின் நண்பராக மாலிக் என்ற கதாபாத்திரத்தின் பெயர் நினைவிற்கு வர உடனே இந்தப் பெயரையே வைத்திருக்கிறார். மேலும் அப்துல் என்பதனையும் சேர்த்து அப்துல் மாலிக் என்று அந்தக் கதாபாத்திரத்தின் பெயரைச் சூட்டியிருக்கிறார். அப்துல் என்றால் இஸ்லாமில் கடவுளின் தூதர் என்று பொருள்படும்படியான பெயராகவும் இருந்ததால் இந்தப் பெயரைச் தேர்வு செய்தார் சசிக்குமார்.