பத்திரிகை ஒன்றில் பணிபுரிந்து கொண்டே தனது உடலையும் கட்டுமஸ்தாக வைத்திருந்த சரத்குமாரை அவரது நண்பர்கள் சினிமாவில் நுழையச் சொல்லித் தூண்ட முதன் முதலாக சினிமா வாய்ப்புத் தேடி சென்னை வந்தார் சரத்குமார். ஆரம்பத்தில் சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்தார்.
அதன்பின் வில்லன் கதாபாத்திரம் கிடைக்க முன்னனி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தார். இவரது ஆக்சன் திறமையைப் பார்த்த இயக்குநர் பவித்ரன் சூரியன் படத்தில் சரத்குமாரை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். சூரியன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
சூரியன் படத்தில் இயக்குநர் பவித்ரனிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்தவர்கள்தான் ஷங்கர் மற்றும் வெங்கடேஷ். சூரியன் படம் வெளிவந்த நேரத்தில் இயக்குநர் பவித்ரன் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனை சரத்குமாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பதாக இருந்த படத்தில் இயக்குநர் பவித்ரன், சரத்குமார் கூட்டணி மீண்டும் இணையவிருந்தது. அதன்பின் அந்தத் திட்டம் சில பவித்ரனுக்கும், குஞ்சுமோனுக்கும் ஏற்பட்ட உரசல்களால் கைவிடப்பட்டது.
இதனையடுத்து ஷங்கரை கே.டி.குஞ்மோனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் சரத்குமார். அப்போது ஜென்டில் மேன் கதையை குஞ்சுமோன் ஓகே சொல்ல முதலில் சரத்குமார் நடிப்பதாக இருந்தது. இருப்பினும் நம்மை ஹீரோவாக்கிய பவித்ரனுக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று அந்தப் பட வாய்ப்பை மறுத்திருக்கிறார் சரத்குமார். மேலும் பவித்ரன் அப்போது இயக்கிய ஐ லவ் இந்தியா படத்தில் கமிட் ஆனார் சரத்குமார். எனவே ஜென்டில் மேன் படமும் ஐ லவ் இந்தியா படமும் ஒரே தருணத்தில் ரிலீஸ் ஆனது.
இதன்பிறகு இசையமைப்பளார் தேவா அப்போது வளர்ந்து வந்த நேரம் அது. அப்போது தேவாவிற்கு முதன் முதலாக மிகப்பெரிய சம்பளமும் பெற்றுக் கொடுத்திருக்கிறார் சரத்குமார். இப்படி சினிமாவில் பல புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுத்த சரத்குமார் இயக்குநர் வெங்கடேஷை மகாபிரபு படத்தில் நடித்துக் கொடுத்து இயக்குநராக அறிமுகப்படுத்தினார். அதன்பின் ஏய் போன்ற படங்கள் இவர்கள் காம்போவில் வெளிவந்தது.
இயக்குநர் லிங்குசாமி நல்ல கதையுடன் சரத்குமாரை அணுகிய போது அப்போது அவர் விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதில் அண்ணன் கதாபாத்திரம் என்பதாலும், லிங்குசாமி கொண்டு வந்த ஸ்கிரிப்டும் அண்ணன் கதாபாத்திரம் என்பதாலும் அந்த வாய்ப்பினை மறுத்திருக்கிறார் அந்தப் படம் தான் ஆனந்தம். மம்முட்டி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சரத்குமார். லிங்குசாமிக்கு தயாரிப்பாளரை அறிமுகப்படுத்தியது சரத்குமாரே. இப்படி திரையில் பலர் முன்னுக்கு வர பெரிதும் உதவியாக இருந்திருக்கிறார் சரத்குமார்.