இன்று ஆர்.ஜே. பாலாஜியை திரையில் காணும் ரசிகர்களைக் காட்டிலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வர்ணனையாளராக அவரை விரும்பும் ரசிகர்களே அதிகம். கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக கோவை ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜே.வாக பணியாற்றிக் கொண்டிருந்தார் பாலாஜி. செய்தித்தாளில் வந்த விளம்பரம் ஒன்றைப் பார்த்து ஆர்.ஜே.வேலைக்கு விண்ணப்பித்து பின் அதில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கோவை எப்.எம்-ல் சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க பின் அதிலிருந்து விலகி பிக் எப்.எம்-ல் பணியாற்றத் தொடங்கினார். சென்னையில் பணியாற்றிய இவரது குரலை தமிழ்நாடே விரும்பியது. கடகடவென கலாட்டாவாகப் பேசும் ஆர்.ஜே.பாலாஜியின் தொகுத்து வழங்கும் திறமையால் அடுத்தடுத்து பல லைவ் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.
பின் அவருக்கு சில சினிமா வாய்ப்புகள் வந்தன. சினிமாவுக்குப் போனால் ஆர்.ஜே.வேலை போய்விடுமே என்று நினைத்து அதிலேயே பணியாற்ற அவரது நண்பர்கள் முயற்சி செய்து பார் என்று ஊக்கம் கொடுத்திருக்கின்றனர். ஆர்.ஜே. வேலையா சினிமாவா என்று யோசித்துத் கொண்டிருந்த வேலையில் ஒருமுறை இயக்குநர் சுந்தர் சி யிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. சுந்தர் சி. தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் ஸ்கிரிப்டை அளித்து இன்னும் என்ன செய்யலாம் என்று கேட்டிருக்கிறார். அப்போது ஸ்கிரிப்டை படித்துப் பார்த்த ஆர்.ஜே.பாலாஜி அதில் ஒரு கதாபாத்திரத்தினை குறித்து திருத்தங்கள் சொல்ல அதில் நீங்களே நடியுங்கள் என்று கூறியிருக்கிறார்.
40 வருடங்களுக்கு முன்பே வாடகைத் தாய் கதையைச் சொன்ன தமிழ் சினிமா…நடிகை லட்சுமிக்கு பெயர் கொடுத்த படம்
ஆர்.ஜே.பாலாஜிக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத வேளையில் முதன் முதலாக கேமரா முன் தலை காட்டுகிறார். அதில் நடித்தது அவருக்கே திருப்தி இல்லாததால் சுந்தர் சியிடம் எனக்கு நடிக்க விருப்பமில்லை என்று கூறியிருக்கிறார். அப்போது சுந்தர் சி இன்று முழுவதும் மற்ற நடிகர்கள் எவ்வாறு நடிக்கிறார் என்று பாருங்கள் அதன்பின் முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்று கூற, அதன்பின் செட்டில் மற்ற நடிகர்கள் எவ்வாறு நடிக்கிறார்கள் என்று பார்த்திருக்கிறார் பல சீனியர் நடிகர்களே 10 டேக் மேல் வாங்கி நடிப்பதைப் பார்த்து இவர்களே இத்தனை டேக் வாங்குகிறார்கள் நம்மால் முடியாதா என்று சுந்தர் சியிடம் முழு சம்மதம் தெரிவித்து நடித்திருக்கிறார்.
ஆர்.ஜே.வாக சுமார் சில ஆயிரங்கள் வாங்கிக் கொண்டிருந்த பாலாஜிக்கு தீயா வேலை செய்யணும் படத்தில் நடித்ததற்காக 6 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. தன்னுடைய இரண்டு வருட சம்பளத்தை ஒரு 10 நாள் ஷுட்டிங்கில் நடித்துப் பெற்ற ஆர்.ஜே. பாலாஜிக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருக்க தொடர்ந்து சினிமாத் துறையில் முழுமூச்சாக இறங்க ஆரம்பித்திருக்கிறார். அதற்குமுன் இ.எம்.ஐ. கூட கட்ட கஷ்டப்பட்டார் என்று பல மேடைகளில் பேசியிருக்கிறார்.
இதனால் சுந்தர் சி மூலம் அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட குரு உச்சத்தில் அமர்ந்து நடிகராகவும், இயக்குநராகவும் இன்று கலக்கி வருகிறார் ஆர்.ஜே. பாலாஜி. தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்குப் பின் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படம் இவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்திருக்கிறது.
மேலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தமிழ் வர்ணனையாளராகவும் அசத்தி வரும் ஆர்.ஜே.பாலாஜிக்கு சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் ரசிகர்களும் அதிக அளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.