வயிறுவலிக்க சிரிக்க வைக்கும் பார்த்திபன்-வடிவேலு காம்போ.. மகள் பேசிய ஒரு வார்த்தையை சூப்பர் காமெடியாக மாற்றிய மேஜிக்

By John A

Published:

தமிழ் சினிமாவில் இணைபிரியாத காமெடி கூட்டணியாக இருந்தவர்கள் கவுண்டமணி-செந்தில். சொக்கத்தங்கம் படத்திற்குப் பின் இவர்களது காம்போ நின்றுவிட்டது. ஆனால் இதற்கு அடுத்ததாக ஒரு ஹீரோவும், காமெடியனும் இணைந்து மறக்க முடியாத இன்றளவும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போடும் காமெடி கூட்டணியை உருவாக்கினார்கள் என்றால் அது வடிவேலுவும் பார்த்திபனும் தான். இவர்கள் காமெடிக் காட்சிகளைப் பார்த்து ரசிக்காதவர்களே கிடையாது. திரையில் இவர்கள் நிகழ்த்தும் மேஜிக் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

வடிவேலு-பார்த்திபன் கூட்டணியில் உருவான முதல்படம் பாரதி கண்ணம்மா. இந்தப் படத்தில் உன் கைய காலா நினைச்சுகிறேன்.. என்று வடிவேலு பார்த்திபனிடம் காட்சிக்குக் காட்சி மாட்டிக் கொண்டு விழிபிதுங்கி தப்பிப்பது பெரிய காமெடி கலாட்டாவே நடக்கும். இதேபோல் இவர்கள் அடுத்து இணைந்து படம் வெற்றிக் கொடிகட்டு. இந்தப் படத்தின் காமெடியைச் சொல்லித் தெரியவேண்டியது இல்லை. துபாய் ரிட்டனாக வடிவேலு காட்டும் அலப்பறைகளும், அவரை பார்த்திபன் தனது ஸ்டைலில் வம்பிழுத்து அடிவாங்க வைப்பதும் சிரிப்புச் சரவெடி.

அக்கா-தம்பி பாசத்தை உணர்த்தி நா. முத்துக்குமார் எழுதிய பாடல்… எதிர்பார்த்த ஹிட் கிடைக்காத வருத்தம்

மேலும் உன்னருகே நானிருந்தால், நினைக்காத நாளில்லை, காக்கைச் சிறகினிலே, குண்டக்க மண்டக்க, காதல் கிறுக்கன், போன்ற படங்களில் இவர்கள் காமெடி காம்போ வேறு லெவலில் இருக்கும். இதில் நினைக்காத நாளில்லை படத்தில் ஹலோ யார் பேசுறது.. என்று போனில் வடிவேலு கேட்க, பார்த்திபன் பின்னால் இருந்து கொண்டு நீதான் பேசுற.. என்று லொள்ளு செய்யும் காமெடி வெகு பிரபலம்.

பெரும்பாலும் பார்த்திபன் – வடிவேலு கூட்டணி காமெடியை பார்த்திபனே எழுதி விடுவாராம். ஷுட்டிங் வரும்போது வெறும் ஒன்-லைனாக இருக்கும் இங்கு வந்தவுடன் இருவரும் மாறிமாறி பேசிக் கொள்ள அதுவே காமெடியாக வளர்ந்து விடுமாம்.

ஒருமுறை பார்த்திபன் மகள் கீர்த்தனா அவருக்குப் போன் செய்திருக்கிறார். அப்போது பார்த்திபன் ஹலோ யார் பேசுறது எனக்கேட்க, அவர் நீங்கதான் பேசுறீங்க என தந்தையை கலாய்த்திருக்கிறார். இதனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட பார்த்திபன் நினைக்காத நாளில்லை படத்தில் அப்படியே காமெடிக் காட்சியாக மாற்றியிருக்கிறார். இப்படித்தான் இந்தக் காமெடி உருவாகியிருக்கிறது. இதேபோல் இவர்கள் கூட்டணியில் அமைந்த காமெடிகள் அனைத்தும் ஒருவார்த்தையில் உருவானவையே..