காதல் தோல்வி கதையா? யதார்த்த நடிப்பில் சோகத்தை வெளிப்படுத்துபவரா? அப்படியென்றால் முதலில் இயக்குநர்களின் நினைவுக்கு வருபவர் நடிகர் முரளி. காதல் தோல்விப் படங்களைக் கொடுத்து திரையில் வெற்றி கண்டவர். தனது மென்மையான நடிப்பால் திரையில் அனைவரையும் உச் கொட்ட வைத்த கலைஞன்.
20 வயது இளைஞராக இருந்த போதே தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி, முதல் படத்தையே வெற்றிப்படமாகக் கொடுத்தவர் முரளி. அந்தப் படம் தான் பூவிலங்கு. படம் வெளியான ஆண்டு 1984. தொடர்ந்து நகைச்சுவை, அதிரடி, குடும்பம், காதல், கிராமத்துக்கதை, நகரத்துக்கதை, வரலாறு உள்ளிட்ட பலவகையான கதைக்களங்கள் கொண்ட படங்களிலும் இயல்பாகவும், திறம்படவும் நடித்து, ரசிகர்கள் இதயங்களில் நீங்காத இடம்பிடித்தார் இதயம் முரளி.
இயக்குநர் மணிரத்னத்திற்கு தமிழில் திருப்புமுனை கொடுத்த படமான பகல் நிலவு படத்தில் முரளி ஹீரோவாக நடித்திருப்பார். இத்தகைய நடிப்புத்திறமையும், அதிர்ஷ்டமும், திரையுலகினருடன் நல்லிணக்கப் போக்கும் வாய்ந்த தமிழ்நடிகர்கள் சிலரே உள்ளனர். அவர்களுள் புரட்சி நாயகன் முரளியும் ஒருவர்.
இவரின் தந்தை சித்தலிங்கையா, கன்னட திரையுலகில் பிரபல தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் விளங்கினார். எனினும், முரளி தான் திரையுலகில் பிரபலமாவதற்கு, எந்த வகையிலும், தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தவில்லை.
MRராதாவாவுடன் காட்சியா? அலறி ஓடிய உச்ச நடிகர்கள்.. இதான் காரணமா?
90s பிளே லிஸ்ட்களில் மோகன் ஹிட்ஸ் பாடல்கள், ராமராஜன் ஹிட்ஸ் பாடல்கள் போல, முரளி ஹிட்ஸ் பாடல்களும் இன்றும் இருக்கின்றன. முரளி சொந்தகுரலில், திரைப்படப் பாடலொன்றும் பாடியுள்ளார். 1995ஆம் ஆண்டில் வெளியான “தொண்டன்” படத்தில் இடம்பெற்ற “நட்டநடு சென்டரு” என்ற பாடலே, முரளி பாடிய பாடலாகும். இப்படத்தில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்களும், சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தில் தன் கதாபாத்திரம் பிடித்துவிட்டால், சக நடிகர்களுடனும் இணைந்து நடிக்கவோ, துணை வேடத்தில் நடிக்கவோ தயங்காதவர். கார்த்திக், விஜயகாந்த், சரத்குமார், மம்முட்டி, பிரபுதேவா, உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளாா்.
“கடல் பூக்கள்” படத்தில் நடித்ததற்காக, தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதைப் பெற்றார். தீவிர மதுப்பழக்கத்தால் தன்னுடைய திரையுலக வாழ்விற்கு விரைவாகவே விடை கொடுத்தார். அவருடைய இறுதிப் படம் 2010-ல் வெளியான பானா காத்தாடி. தொடர்ந்து 26 ஆண்டுகளாக, தமிழ்திரையுலகில் நடித்து, இறுதிவரை மார்க்கெட் இழக்காத நடிகர்கள் மிகச்சிலரே. அவர்களுள் முரளியும் ஒருவர். தன் மகன் அதர்வாவின் முதல்படமான “பாணா காத்தாடி” படமே, முரளியின் இறுதிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.