எம்.என்.நம்பியார்… இவரை நமக்கு சினிமாவில் கொடூரமான வில்லனாகத் தான் தெரியும். ஆனால் இவருக்குள் உள்ள பல அவதாரங்கள் நமக்குத் தெரியாது.
மேடை ஏறினால் மிமிக்ரி கலைஞர்கள் இவரது குரலைத் தான் கொடுப்பார்கள். ஆனால் இவரே ஒரு மிமிக்ரி கலைஞர் தான். எம்ஜிஆர், சிவாஜி, பி.எஸ்.வீரப்பா, சரோஜா தேவி என அத்தனை பேருடைய வாய்ஸையும் கொடுத்து அசர வைப்பாராம்.
தன் வாழ்நாள் முழுவதும் சபரிமலைக்கு மாலை போட்டு குருசாமிக்கெல்லாம் குருசாமியாக வளர்ந்து ஐயப்ப பக்தராகவே வாழ்ந்துள்ளார்.
இவர் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் பத்திரிகையாளர் ஒருவர் இவரை பேட்டி எடுக்க வந்துள்ளார். அப்போது வாளுடன் ஒரு போஸ் கொடுங்கள் என்றாராம். அதற்கு வீட்டில் வாள் இருந்தால் தலையில் கர்வம் ஏறிவிடும். அதனால் பயிற்சி வகுப்பிலேயே அதை வைத்து விடுவேன் என்றாராம்.
இறப்பதற்கு 5 ஆண்டுகள் முன்பு வரை உடற்பயிற்சியைத் தவறாமல் செய்து வந்தாராம். பிள்ளைகளின் அன்பு கட்டளைக்கு இணங்கவே உடற்பயிற்சி செய்வதையையும் நிறுத்தினாராம்.
அதிகாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள் மெரினாவில் நடைபயிற்சி, 5.15மணிக்கு ஆயில் மசாஜ் செய்து கொண்டு அங்குள்ள மாநகராட்சி நீச்சல் குளத்தில் குளித்து விட்டுத் தான் வீட்டுக்கே வருவாராம்.
மெரீனாவுக்கு போகாத நாள்களில் 1 மணி நேரம் யோகா செயதுவிட்டு அங்கு வரும் சிவாஜி, ஜெமினிகணேசனுடன் டென்னிஸ் ஆடுவாராம். வெளியூர் படப்பிடிப்பு என்றாலும் 100 சூரிய நமஸ்காரங்களைப் போட்டு விடுவாராம். அதன்பிறகு 1 லிட்டர் தண்ணீரை மறக்காமல் குடித்து விடுவாராம்.
உடற்பயிற்சிக்காகவே தனது வீட்டில் பேட்மிண்டன் கோர்ட், ஜிம், மணல் கொட்டிய மல்யுத்தக் களம் என்று பல சிறப்பம்சங்களைச் செய்துள்ளார்.
19வயதில் இவரைத் தேடி வந்தது ராணுவ வேலை. ஆனால் அங்கு சென்றால் அசைவம் சாப்பிட வேண்டுமெ என அந்த வேலையை உதறித்தள்ளினாராம்.
எம்ஜிஆரும், நம்பியாரும் ஒன்றாகவே சிலம்பம் கற்று வந்தனராம். கொத்தவால்சாவடியில் உள்ள கந்தசாமி தான் இவர்களது குரு.
எம்ஜிஆர் படங்கள் என்றாலே இவரது வில்லத்தனம் தான் அதிகமாகப் பேசப்படும். அப்போது ஒரு முறை சூட்டிங் நடந்தபோது பார்க்க வந்த ரசிகர் ஒருவரை வில்லன் போலவே பயங்கரமாக முழித்து நடித்து ஓடவிட்டாராம். அவர்கள் ஓடுவதைப் பார்த்து குழந்தை போல விழுந்து விழுந்து சிரிப்பாராம்.
ஒருமுறை எம்ஜிஆர் இதைப் பார்த்து நிஜத்திலும் ரசிகர்களை இப்படி மிரட்ட வேண்டுமா என்று கேட்டார். அதற்கு, அவர்கள் இந்த நம்பியாரைத் தானே பார்க்க வர்றாங்க… அது அப்படியே இருக்கட்டுமே என்று சாதாரணமாக சொன்னாராம்.