தமிழ் சினிமாவில் காதல் கோட்டை படத்தின் மூலம் ஒரே நாளில் உச்சத்தில் சென்றவர் இயக்குநர் அகத்தியன். அஜீத், தேவயானி, இயக்குநர் அகத்தியன் ஆகிய மூவருக்குமே இப்படம் பெரும் திருப்புமுனையாக இருந்தது. மேலும் அகத்தியனுக்கு இப்படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது. ஆனால் அகத்தியன் சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில் இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் செய்த பேருதவிக்கு நன்றிக் கடனாக பதிலுக்கு அகத்தியன் செய்த செயல் நெகிழ வைத்திருக்கிறது.
இயக்குநர் அகத்தியன் சினிமாவில் புகழ்பெறாத நேரத்தில் தன்னுடைய கதைகளை எடுத்துக் கொண்டு ஒரு படம் விஷயமாக இயக்குநர் மணிவண்ணனைச் சந்திக்கச் சென்றிருக்கிறார். அப்போது அகத்தியனின் தந்தை காலமாகி விட கையில் காசில்லாமல் தவித்திருக்கிறார். அப்போது நண்பர்களிடம் கடன் வாங்கி ஊருக்குச் சென்று தந்தையின் இறுதிச் சடங்கினை நல்ல முறையில் முடித்து மீண்டும் சென்னை திரும்பியிருக்கிறார்.
மேலும் தந்தையின் 16-வது நாள் காரியத்திற்கு இவருக்கு மறுபடியும் பணம் தேவைப்பட்டிருக்கிறது. அதற்கு 1500 ரூபாய் பணம் வேண்டும். ஏற்கனவே நண்பர்களிடம் கடன் வாங்கியாகி விட்டது. இந்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைய் அப்போது மணிவண்ணன் ஞாபகம் வந்திருக்கிறது.
நேராக அவரிடம் சென்று அன்று நான் உங்களுக்கு ஒரு கதை சொன்னேனே அந்தக் கதையின் உரிமையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குப் பதிலாக எனக்கு ரூ.1500 மட்டும் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார் அகத்தியன். இதனைக் கேட்ட மணிவண்ணன் அகத்தியனிடம் இதோ பாருங்க.. நீங்கள் இயக்குநராக முயற்சி செய்கிறீர்கள். இந்தக் கதையே பின்னாளில் சூப்பர் ஹிட் படமாக மாற வாய்ப்புண்டு. எனவே இந்தக் கதையை என்னிடமோ வேறு யாரிடமோ விற்க வேண்டாம். உங்களுக்குத் தேவையான பணத்தினை நான் தருகிறேன். என்று கூறி அவருக்கு 1500 ரூபாய் கொடுத்து உதவியிருக்கிறார்.
அதன்பின் அகத்தியன் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து வான்மதி, காதல் கோட்டை, காதல் கவிதை என சில படங்களை இயக்கினார். இந்த அத்தனை படங்களிலும் மணிவண்ணனை நடிக்க வைத்திருக்கிறார். அப்போது மணிவண்ணன் அகத்தியனிடம் கூறும் போது இந்த அத்தனை படங்களிலும் சேர்த்து உங்களிடம் எவ்வளவு சம்பளம் வாங்கியிருப்பேன் என்று கேட்க அகத்தியன் ஒருநிமிடம் யோசித்திருக்கிறார். மணிவண்ணனே பதிலுக்கு 75 லட்சம் வாங்கியிருக்கிறேன். அன்று உங்களுக்கு 1500 எதையும் எதிர்பார்க்காமல் கொடுத்தது. இன்று எனக்கு பன்மடங்காக நீங்கள் செய்திருக்கிறீர்கள். காலம் எப்படியெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறது பார்த்தீர்களா என்று கேட்க, அகத்தியன் நெகிழ்ந்து போயிருக்கிறார்.