சினிமாவில் சாதிக்க துடிக்கும் பலருக்கும் அதற்கான வாய்ப்புகள் எளிதில் கிடைத்து விடாது. பாடுபட்டு, கடினமாக உழைத்து, பல அவமானங்களுக்கு பின்னர் இன்று முன்னணி இடத்தில் இருப்பவர்கள் ஏராளம் பேர். அப்படி பல கஷ்டங்களை கடந்து இன்று பல துறையில் பிரபலமாக இருப்பவர் தான் போஸ் வெங்கட். இவர் தமிழ் திரைப்படங்களில் மட்டுமின்றி மலையாளம், கன்னட திரைப்படங்களில் நடித்தும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததுடன் ஒரு திரைப்படத்தை இயக்கவும் செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பல்வேறு துறைகளில் ஜொலித்த போஸ் வெங்கட், கடந்த 1976 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிறந்தார். திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று அவர் 17 வயது முதல் ஆசைப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்புகள் எளிதில் கிடைக்கவில்லை.
இதனையடுத்து அவர் ஆட்டோ ஓட்டியபடியே திரைப்பட வாய்ப்புகளை தேடி வந்தார். இந்த நிலையில் தான் அவருக்கு ’மெட்டி ஒலி’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியதையடுத்து பாரதிராஜாவின் ஈரநிலம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதனையடுத்து அவர் அரசாட்சி, கண்ணம்மா, தலைநகரம், தீபாவளி, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். முதல் முறையாக ’சிவாஜி’ திரைப்படத்தில் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அவர் பல பேட்டிகளில் பெருமையாக கூறியுள்ளார்.
தொடர்ந்து அர்ஜுன் நடித்த மருதமலை, ஜீவா நடித்த ராமேஸ்வரம், ஜெயம் ரவி நடித்த தாம் தூம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். குறிப்பாக சூர்யா நடித்த சிங்கம் திரைப்படத்தில் அவருக்கு நல்ல கேரக்டர் அமைந்தது. அதன் பிறகு ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக 2014 ஆம் ஆண்டு மட்டும் அவர் கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்தார்.
2017 ஆம் ஆண்டு ’தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக கார்த்தியுடன் நடித்து கலக்கி இருப்பார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது என்றே சொல்லலாம். அதன் பிறகு அவர் ஜருகண்டி, அக்னி தேவி, தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
2021 ஆம் ஆண்டில் வெளியான 5 படங்களில் அவர் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதே போல, கடந்த ஆண்டு வெளியான அயோத்தி படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் போஸ் வெங்கட் நடித்துள்ளார்
மேலும் அவர் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஸ்ரீராம், கார்த்தி, சாயாதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட இருந்த இந்த படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இவர் பல திரைப்படங்களில் பின்னணி குரல் கொடுத்துள்ளார். அஜீத் நடித்த வீரம் திரைப்படத்தில் அதுல் குல்கர்னிக்கு குரல் கொடுத்தது இவர்தான். அதேபோல் என்னை அறிந்தால் படத்தில் ஆசிஷ் வித்யார்த்திக்கும் குரல் கொடுத்துள்ளார். மேலும் மெட்டி ஒலி தொடரில் அறிமுகமான போஸ் வெங்கட் அதன் பிறகு லட்சுமி, செல்வி, ஆட்டோ சங்கர், மகாபாரதம், முடிவல்ல ஆரம்பம் போன்ற தொடர்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு சில வெப் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.