தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் அதிகமான படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இரவு 11 மணியளவில் தூக்கத்திலேயே உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். திரையுலகில் இந்தச் செய்தி சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமானப்படையில் பணிபுரிந்து கொண்டிருந்த டெல்லி கணேஷ், நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இவரது நடிப்புத் திறமையைப் பார்த்த இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் பட்டினப் பிரவேசம் படத்தில் முதன் முறையாக இவரை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் விமானப் படைப் பணியை விட்டு விலகி நடிப்பில் கவனம் செலுத்தினார். தொடர்ந்து பசி என்ற படத்திற்காக தமிழக அரசின் சிறப்பு விருதினைப் பெற்றார். மேலும் கலைமாமணி உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றுள்ளார்.
நல்ல வாய்ப்புக்காக ஏங்கிய கவுண்டமணி… நிராகரித்த பாரதிராஜா… பாக்கியராஜ் செய்த வேலை!
காமெடி, வில்லன், குணச்சித்திரம் என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னுடைய முத்திரையைப் பதிப்பவர் டெல்லி கணேஷ். குறிப்பாக காமெடிக்கு தெனாலி, அவ்வை சண்முகி, மைக்கேல் மதன காமராசன் போன்ற படங்களும், குணச்சித்திர வேடங்களுக்கு சிந்து பைரவி, பசி, ஸ்ரீ ராகவேந்திரா உள்ளிட்ட படங்களும், அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லன் என நடித்து ரசிகர்களிடம் பாராட்டினைப் பெற்றார் டெல்லி கணேஷ்.
டப்பிங் கலைஞராகவும் பணியாற்றிய டெல்லி கணேஷ் ஏராளமான படங்களுக்கு மற்ற நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். மேலும் வெப் சீரிஸ், சீரியல்கள், குறும்படங்கள், விழிப்புணர்வு விளம்பரங்கள் உள்ளிட்டவற்றிலும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த டெல்லி கணேஷ் 80 வயதிலும் தன்னுடைய நடிப்பினை நிறுத்த வில்லை. இன்று அவரது மூச்சு நின்றாலும் அவர் நடித்த படங்கள் மூலம் என்றும் ரசிகர்கள் மனதில் குடிகொண்டிருப்பார்.