ரெட் படம் பிளாப் ஆக காரணம் இதான்.. ஷூட்டிங்கில் அஜீத் வைத்த கோரிக்கை.. உண்மையை உடைத்த சிங்கம் புலி

By John A

Published:

விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா திரைப்படம் 96 படத்திற்குப் பிறகு அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது. இந்தப்படம் விஜய் சேதுபதிக்கு மட்டுமல்லாது நடிகர் சிங்கம்புலிக்கும் திருப்புமுனையைக் கொடுத்திருக்கிறது. காமெடியில் கலக்கி வந்த சிங்கம்புலி சைக்கோ, மகாராஜா போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அடுத்த எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா வரிசையில் இணைந்துள்ளார்.

இயக்குநர் சுந்தர் சியிடம் உதவி இயக்குநராகவும், பாலா ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சிங்கம் புலி அஜீத் நடித்த உன்னைத் தேடி திரைப்படத்திலும் உதவி இயக்குநராகப் பணி புரிந்தார். அப்போது அஜீத்துடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அவருக்காக ஒரு கதை எழுதினார். அந்தப் படம்தான் ரெட். 2002 பொங்கல் தினத்தன்று வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அஜீத்துடன் பிரியாகில், ரகுவரன், மணிவண்ணன், ராஜேஷ், ரேவதி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அஜீத்தின் பக்கா ஆக்சன் படமாக வெளிவந்த ரெட் திரைப்படம் வசூலில் சற்று சோடை போனது. முழுக்க முழுக்க அஜீத் ரசிகர்களை மட்டுமே இந்தத் திரைப்படம் திருப்திப்படுத்தியது. இதனால் படம் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் சரியாகச் சென்று சேரவில்லை. நல்ல கதை, அஜீத் உள்ளிட்ட பல இருந்தும் ஏன் ரெட் திரைப்படம் சரியாகப் போகவில்லை என்பது குறித்து இயக்குநர் சிங்கம்புலி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

அதில், ரெட் பட ஷுட்டிங் முழுவதும் மதுரையை கதைக் களமாக வைத்து எடுக்கப்பட்டது. ஒருமுறை அஜீத் மதுரையில் உள்ள திருமணம் ஒன்றில் பங்கேற்க வந்த போது அவரைக் காண ரசிகர்கள் ஏராளமாகக் குவிந்தனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் வந்த வேகத்தில் அஜீத் மணமக்களை வாழ்த்தி விட்டு திரும்பிவிட்டார்.

வைரலாகும் வைரமுத்து புகைப்படம்.. பேனா இருக்க வேண்டிய கையில் துப்பாக்கி ஏந்தி போஸ்..

அப்போது அவரைக் காண ரசிகர்கள் முண்டியடித்ததால் சலசலப்பு ஏற்பட்டு திருமண மண்டபத்தில் இருந்த பொருட்கள் சேதமாகின. இதனால் ரூ. 2 லட்சம் வரை வீண் செலவாகிப் போயிருக்கிறது. இந்த நிலையில் நான் மீண்டும் மதுரையின் வீதிகளில் நடித்தால் கண்டிப்பாக கூட்டம் கூடும். எனவே மதுரையின் வீதிகளைப் போன்று செட் அமைத்து அங்கே படப்பிடிப்பு நடத்தலாம் என சிங்கம் புலியிடம் கூறியிருக்கிறார்.

ஆழ்ந்த யோசனைக்குப் பின் சிங்கம்புலி அஜீத் படமாயிற்றே வாய்ப்பினை விடக் கூடாது என எண்ணி ஹைதராபாத்தில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் செட் அமைத்து அங்கே படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். படம் வெளியான போது மதுரைக்காரர்கள் ஆர்வத்துடன் படத்தினைப் பார்க்க இது மேலமாசி வீதி இல்லையே, இந்தத் தெரு இப்படி இருக்காதே என்று கண்டுபிடிக்க அது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. மேலும் ஒரு காட்சியில் பின்னனியில் டைட்டல் பார்க் தெரிய அப்போது மதுரையில் டைட்டல் பார்க் இல்லாததால் அதையும் ரசிகர்கள் கண்டுபிடித்துச் சொல்ல கதைக்களமே மாறியது.

இதனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போயிருக்கிறது. இதற்கு அடுத்ததாக சிங்கம்புலி சூர்யாவை வைத்து இயக்கிய மாயாவி வெற்றியைப் பெற்றது.