துணிவு படத்தினை அடுத்து நடிகர் அஜீத் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஷுட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இயக்குநர் மகிழ்திருமேணி விடா முயற்சி படத்தினை இயக்கி வருகிறார். இடையில் மீண்டும் சென்னை திரும்பிய அஜீத் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது நண்பரான வெற்றி துரைசாமியின் மறைவுச் செய்தியை அறிந்து அவர் வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்தினார். தற்போது மீண்டும் விடா முயற்சி படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டிற்குச் செல்ல உள்ள நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.
இந்தச் செய்தி காட்டுத் தீ போல் சினிமா உலகில் பரவியது. அஜீத்துக்கு என்ன ஆனது என்று அவர் ரசிகர்களும் குழம்பிப் போயினர். தொடர்ந்து ஊடகங்களில் அஜீத்துக்கு மூளையில் சிறிய கட்டி இருந்ததாகவும், தற்போது அது அகற்றப்பட்டு அவர் நலமுடன் உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் பரவின. இதனை அறிந்து அவரது ரசிகர்கள் பின் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இந்நிலையில் இன்று காலை அஜீத்தின் பி.ஆர்.ஓ வான சுரேஷ் சந்திரா அஜீத்தின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரத்தை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டடுள்ளதாகவது, “ஊடகங்களில் வந்தபடி அஜீத்துக்கு மூளையில் கட்டி என்பதெல்லாம் உண்மை கிடையாது.
வழக்கமான மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட போது காதுக்குக் கீழ் நரம்பு வீக்கம் இருந்தது. அதனைக் கண்டுபிடித்த மருத்துவர்கள் அடுத்த அரைமணிநேரத்தில் அதற்கான சிகிச்சையை முடித்து உடனே சாதாரணவார்டுக்கு மாற்றப்பட்டார். மேலும் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இன்று அல்லது நாளை வீடு திரும்புவார்“ என்று அந்த அறிக்கையில் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மோட்டார் சைக்கிள் பந்தய வீரரான அஜீத் விபத்துக்களில் சிக்கி முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சண்டைக் காட்சிகள் தனது வலியையும் பொருட்படுத்தாது ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என நடித்து வருகிறார். விடாமுயற்சி என்னும் என்ற வார்த்தைக்கு இலக்கணமாக அஜீத் வாழ்ந்து வருவதுதான் சிறப்பே.
ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.
