தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குநர்களுக்கு அதிகமாக வாய்ப்பளித்தவர்கள் கேப்டன் விஜயகாந்த் மற்றும் தல அஜீத். இருவருமே சினிமாவில் உச்சத்தில் வந்த காலகட்டத்தில் தங்களிடம் கதை சொல்ல வரும் புதுமுக இயக்குநர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களிடம் கதை கேட்பர்.
அப்படி அவர்கள் கூறும் கதை பிடித்திருந்தால் உடனே படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வது அவர்களின் குணம். அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் ஊமை விழிகள், புலன் விசாரணை போன்ற படங்களில் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்கள் பின்னர் பிரபல இயக்குநர்களாக வலம் வந்தனர்.
அந்த வகையில் ஒரு இயக்குநர் கேப்டன் விஜயகாந்த் மற்றும் அஜீத ஆகிய இருவரையுமே இயக்கி இன்று இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநராகத் திகழ்க்கிறார். அவர்தான் ஏ.ஆர். முருகதாஸ். இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவிடம் குஷி படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஏ.ஆர். முருகதாஸ் அதன்பின் அஜீத்துக்காக ஒரு கதையை தயார் செய்திருக்கிறார்.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் தோற்றத்தைக் கண்ட பலரும் இவர் எப்படி சினிமா இயக்குவார் என்று அவரைக் கிண்டல் செய்துள்ளனர். எனினும் தன் தோற்றத்தைக் கண்டு கலங்காமல் தன் திறமையின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைக்கு அஜீத் மூலமாக வழி பிறந்தது.
தீனா படத்தின் கதையை உருவாக்கி வைத்திருந்தவர் பல ஹீரோக்களிடம் சொல்லி யாரும் நடிக்க முன்வரவில்லை. இந்நிலையில் ஒருமுறை எஸ்.ஜே. சூர்யாவிடம் உதவியாளராக இருந்த ஒருவர் முருகதாஸைச் சந்தித்து அஜீத் உங்களைச் சந்திக்க விரும்புகிறார் என்று கூறவே, அப்போது நேரில் இருவரும் சந்தித்துள்ளனர்.
கதை வைத்துள்ளீர்களாமே அந்தக் கதையைக் கூறுங்கள் என்று அஜீத் கேட்க தனது கனவு இன்னும் சற்று நேரத்தில் நனவாகப் போகிறது என்று தெரியாமல் உடனே தீனா படக் கதையை கூறியிருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ். அஜீத்துக்கு இந்தக் கதை பிடித்துப் போக உடனே நடிக்க ஒத்துக் கொண்டார்.
மேலும் தன் பாக்கெட்டிலிருந்து உடனடியாக ரூ. 1000 எடுத்து ஏ.ஆர். முருகதாஸுக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளார். தனது இயக்குநர் கனவு நனவானது என எண்ணி முருகதாஸ் தீனா படத்தினை எடுத்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மேலும் அஜீத்துக்கு இந்தப்படம் மூலம் தல என்ற பட்டப் பெயரையும் உருவாக்கிக் கொடுத்தது.
அஜீத்தை ஆக்சன் ஹீரோவாக மாற்றியதில் தீனா படம் பெரிய பங்கு வகித்தது. தொடர்ந்து அடுத்த படமே கேப்டன் விஜயகாந்தை வைத்து ரமணா படத்தை இயக்க இந்தப் படமும் வெற்றி பெற்றது. இப்படி ஏ.ஆர். முருகதாஸின் வெற்றிக்குப் பின்னால் கேப்டன் விஜயகாந்த் மற்றும் அஜீத் ஆகிய இருவரும் முக்கிய பங்கு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அஜீத் முதன் முதலாகக் கொடுத்த 1000 ரூபாயை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறாராம் ஏ.ஆர். முருகதாஸ்.