தேசிய விருது, அஜீத் எடுத்த போட்டோ ஷூட் இருந்தும் திரையில் சாதிக்க போராடும் அப்புகுட்டி

By John A

Published:

1998-ல் வெளியான மறுமலர்ச்சி திரைப்படம் மூலம் சினிமாதுறையில் கால்பதித்தவர் நடிகர் அப்புக்குட்டி என்கிற சிவபாலன். அப்படத்தில் ஒரு காட்சியில் வந்து செல்லும் அவர் தொடர்ந்து பலபடங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவருக்கு எந்தப் படமும் புகழைப் பெற்றுத் தரவில்லை. இந்நிலையில் இவரின் நடிப்புத் திறமையைப் பார்த்து சீயான் விக்ரமுக்கு பாலா எப்படி சேது மூலம் திருப்புமுனையைக் கொடுத்தாரோ அதே போல் அப்புக்குட்டிக்கும் திருப்புமுனையான படம் அழகர்சாமியின் குதிரை.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் நூலான அழகர்சாமியின் குதிரை நாவலைத் தழுவி அதே பெயரில் இந்த படத்தினை இயக்கியிருந்தார் இயக்குநர் சுசீந்திரன். இந்தப் படத்தில் அப்புக்குட்டியை கதையின் நாயகனாக நடிக்க வைத்தார் சுசீந்திரன். இளையாராஜாவின் இசையில் உருவான இப்படம் அப்புக்குட்டிக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. கமர்ஷியல் படங்களையே அதிகம் எடுக்கும் சுசீந்திரன் இப்படத்தினை ஒரு விருதுப் படமாகவே எடுத்திருந்தார்.

அவர் நினைத்தது போல் இந்தப் படம் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை அப்புக்குட்டிக்கு பெற்றுத் தந்தது. ஆனால் அடுத்தடுத்து தமிழில் பெரிய ரவுண்டுவருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட வாய்ப்புகளின்றி இருந்தார். அதன்பின் தமிழ் மற்றும் மலையாளத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடித்து வந்தவர் சரியான கேரக்டர்கள் இன்றி தவித்து வந்தார்.

ஒரே கதையம்சம் தான்..மகேந்திரன் முதல் அட்லி வரை நான்கு காலகட்டங்களில் எடுத்து நான்கும் ஹிட் ஆன அதிசயம்!

இந்நிலையில் இவருக்கு சிறுத்தை சிவா இயக்கிய வீரம் படத்தில் அஜீத்துடன் நடிக்க வாய்ப்பினைக் கொடுத்தார். இப்படத்தில் குழந்தையாக அஜீத்தின் உதவியாளராக அசத்தியிருப்பார் அப்புக்குட்டி. இந்தப் பட ஷுட்டிங்கின் போது இவரின் நடிப்புத் திறமையைப் பார்த்த அஜீத் இவரை வைத்து போட்டோஷூட் நடத்தினார். அப்போது இந்தப் புகைப்படங்கள்அனைத்தும் வைரலானது.

எனவே அப்புக்குட்டி அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிட்டார் என்றிருந்த நிலையில் மீண்டும் பழைய கதை தான். பெரிதாக வாய்ப்புகளின்றி ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2022-ல் வெளியான இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படமும் அவருக்குப் பெயரை வாங்கிக் கொடுத்தது.

இப்படி பல முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்தும், தேசிய விருதினைப் பெற்றும் சரியான பட வாய்ப்புகளின்றி இருக்கிறார் அப்புக்குட்டி. ஆனால் இவருடன் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த சூரி தற்போது மளமளவென வளர்ந்து இன்று தொட முடியா உயரத்தில் இருக்கிறார். சினிமாவைப் பொறுத்தவரை அதிர்ஷ்டம் என்பது சில நேரங்களில் உண்மையாகி விடுகிறது என்பதற்கு அப்புக்குட்டியின் சினிமா பயணம் ஓர் உதாரணம்.