பாடு நிலா ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவர்கள் தான் நாம். காதல், கோபம், சோகம், உணர்ச்சி, வெறுப்பு, சந்தோஷம், பாசம், கண்ணீர் என அனைத்து உணர்ச்சிகளையும் தன் அபாரக் குரல் வளத்தால் பாடி ரசிகர்களை மனமுருகச் செய்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், துளு, ஆங்கிலம் எனப் பல மொழிகளில் கிட்டத்தட்ட 50,000 பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருப்பவர்.
எஸ்.பி.பி முதன்முதலாக தமிழில் எம்.ஜி.ஆருக்காக ஆயிரம் நிலவே வா பாடலை பாடினார். ஆனால் அதற்கு முன்பே இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடல் வெளியானது. முதல் பாட்டிலேயே மெய்சிலிர்க்க வைத்தவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசையுலகை ஆண்டது தனி வரலாறு.
இத்தனைக்கும் எஸ்.பி.பிக்கு முறையான சங்கீத ஞானமோ, பயிற்சிகளோ கிடையாது. கேள்வி அறிவில் இப்படி ஒரு இசையுலக மகான் திகழ்ந்தார் என்பதுதான் ஆச்சர்யத்தின் உச்சகட்டம். இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த 2020 செப்டம்பர் மாதம் கொரோனா தொற்றுக்கு ஆளாகி தீவிர சிகிச்சைக்குப் பின் பலனின்றி உயிரிழந்தார்.
அவரின் மறைவால் இசை ரசிகர்கள் பெரிதும் சோகமடைந்தனர். மேலும் கொரோனா தொற்று அதிகமிருந்த காலகட்டமாதலால் கட்டுப்பாடுகள் பல இருந்த நிலையில் ரசிகர்களால் அவருக்கு அஞ்சலி செலுத்த இயலவில்லை. இந்நிலையில் அவரது உடலானது அவரது சொந்த ஊரான திருவள்ளுர் மாவட்டம் உள்ள ஒரு கிராமத்தில் அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தினசரி ரசிகர்கள் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவர் அடிக்கடி உச்சரிக்கும், “சர்வே ஜனாஸ்ஸு, ஜனா பவந்து, ஸர்வேசு ஜனா சுகினோ பவ” என்ற மந்திரமும் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. இதன் அர்த்தம் என்னவெனில் எல்லா மக்களும் நலமுடன், ஒற்றுமையுடன், நல்ல ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதே ஆகும். சமஸ்கிருத மந்திரமான இதை வள்ளலார் அடிக்கடி பயன்படுத்துவார். அதேபோல் எஸ்.பி.பியும் இம்மந்திரத்தை அடிக்கடி உச்சரிப்பாராம்.
இவ்வாறு இந்தமந்திரமானது பொறிக்கப்பட்ட இந்த சிற்பத்தை 6 சிற்பிகள் இணைந்து வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு அமைக்கப்பட்ட சிலைகள், புதுச்சேரி அடுத்துள்ள ஆரோவில் சஞ்சீவி நகரில் உள்ள சிற்பக்கூடத்தில் உருவாக்கப்பட்டது. 6 டன் எடையுள்ள ஒரே பாறையில் எஸ்பிபியின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.
