டிவி சீரியல்கள் தற்போது நாளுக்கு நாள் மோசமாக சென்று கொண்டிருக்கின்றன. இதை ஒழுங்குபடுத்த சென்சார் கமிட்டி அமைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு சின்னத்திரை உலகினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை சீரியல்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில், சின்னத்திரை சீரியல்களில் அடுத்தவன் பொண்டாட்டியை காதலிப்பது, அடுத்தவன் புருஷனை காதலிப்பது, குற்றச்செயல்களில் ஈடுபடுவது போன்ற கலாச்சாரத்துக்கு முரணான கதை அம்சங்கள் அதிகமாக உள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை அடுத்து, மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நாகரீகம், கலாச்சாரம் மிகுந்த இந்திய நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில், டிவி தொடர்கள் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கவர்ச்சி ஆடைகள், ஆபாச காட்சிகள், இன்னொரு குடும்பத்தை கெடுப்பது, குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்குவது, விவாகரத்து செய்வது, பழிவாங்குவது போன்ற காட்சிகள் அதிகம் காணப்படுகின்றன.
இது பார்வையாளர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் எனவே, தொலைக்காட்சி தொடர்களுக்கும் வெப் தொடர்களுக்கும் சென்சார் கொண்டு வர வேண்டும் என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இது குறித்து மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு இரண்டு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.