ஓளிப்பதிவு என்பது சினிமாவில் மிகவும் சவாலான பணி. அந்தக்காலத்து மாருதிராவில் ஆரம்பித்து பாரதிராஜாவின் ஆஸ்தான கேமரா மேன் நிவாஸ், பாசிலின் ஆஸ்தான கேமரா மேன் ஆனந்தக்குட்டன், பாலச்சந்தரின் ஆஸ்தான கேமரா மேன் ரகு நாத ரெட்டி, ஆர்.சுந்தர்ராஜனின் ஆஸ்தான கேமரா மேன் ராஜராஜன் என தங்களது பணியை செவ்வனே செய்து வந்திருக்கின்றனர், இயக்குனர் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா, கேமரா மேதை அசோக்குமார் போன்றோர் சிறப்பாக செயல்பட்டு தங்களது பணியை சிறப்பாக செய்தனர்.
அதுவும் பாலுமகேந்திராவின் கேமரா என்றால் கலர்புல்லாக அம்சமாக அப்படியே இயற்கை காட்சிகளை அள்ளிவரும். உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தில் வரும் மலரே மலரே உல்லாசம், கண்ணில் என்ன கார்காலம் பாடல்களை எல்லாம் பார்த்தால் அவ்வளவு கலர்புல்லாக பிரமாண்டமாக இருக்கும்.
ஒளிப்பதிவில் இவ்வளவு வித்தியாசம் காட்ட முடியுமா என பிரமிக்க வைத்திருப்பார். வண்ண வண்ண பூக்கள் படத்தில் பிரசாந்த் சைக்கிள் ஓட்டிக்கொண்டே பாடிவரும் இள நெஞ்சே வா பாடலை பாராட்டிக்கொண்டே இருக்கலாம்.
இசைஞானியின் இசை ஒரு பக்கம் கை கொடுக்கிறதென்றால் இவரின் ஓளிப்பதிவும் கை கொடுத்து ஒலி ஒளி இரண்டுமே அம்சமாக இருக்கும். சாதாரணமாக சாணியை உருட்டிக்கொண்டு வரும் வண்டைக்கூட அழகாக படம்பிடித்திருப்பார் இயக்குனர் பாலுமகேந்திரா.
இதே போல் ராஜராஜன் அவர்களின் ஒளிப்பதிவும் கலர்புல்லாக இருக்கும். மலைக்காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா என வெள்ளை ஆட்டுக்குட்டியை ராதா தூக்கிக்கொண்டு பாடுவது அதற்கேற்ற கலர்புல் ஒளிப்பதிவு என களைகட்டும். அது மாதிரி இடம்லாம் இன்னும் இருக்கத்தான் செய்யுது. தமிழ் இயக்குனர்கள் அங்கல்லாம் போறாங்களான்னுதான் தெரியல,
அந்த வகையில் ராஜ்கிரண் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து புகழ்பெற்ற கேமரா மேன் கிச்சாஸை தமிழ் பிரமாண்ட இயக்குனர்கள் கண்டுகொண்டதாக தெரியவில்லை. மலையாளத்தில் பல பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர் கிச்சாஸ் .
தமிழில் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, போன்ற ராஜ்கிரண் டைப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வண்ண மையை வாங்கி அப்படியே வெள்ளைத்தாளில் ஊற்றிவிட்டது போல அவ்வளவு ஒரு கலர்ஃபுல் ஒளிப்பதிவை இவரின் ஒளிப்பதிவில் காண முடிகிறது.
ராசாவின் மனசிலே படத்தில் வரும் குயில்பாட்டு ஓ வந்ததென்ன என்ற பாடலில் சாதாரண இலையைக்கூட பிரமாண்டமாக அழகாக காட்டியிருப்பார்.
அரண்மனைக்கிளி படத்தில் வரும் ராசாவே உன்னை விடமாட்டேன் பாடலில் விரியும் தொட்டாசிணுங்கி செடி, அழகான ஆடுகள், அழகான அருவி என கலர்புல்லாக பார்க்கவே பிரமாண்டமாக நாமும் அங்கு சென்று இருக்க வேண்டும் என்ற அளவுக்கு காண்பித்து இருப்பார்.
பிரபல மலையாள இயக்குனரான லோகிததாஸுடன் இணைந்து கஸ்தூரிமான் உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார்.
இப்போது நல்ல தொழில் திறமையுடன் இருக்கும் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் கேமராவுக்கு ஜீவனான கலர்ஃபுல் இயற்கை காட்சிகள் கிராமத்து காட்சிகள், மலையருவிகள் அது சம்பந்தப்பட்ட காட்சிகளில் இருந்து விலகி, ஜீவனே இல்லாத கிராபிக்ஸ் காட்சிகள், பிரமாண்டம் என்று காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
கிச்சாஸ் பெரிய ஒளிப்பதிவாளராக இருந்தாலும் இவ்வளவு சிம்பிளான விஷயங்களை பிரமாண்டமாக காண்பித்தாலும், கமலஹாசன் போல பெரிய சினிமா தெரிந்த கலைஞர்கள் கூட திறமையுள்ள கிச்சாஸிடம் சேர்ந்து பணிபுரியாதது வருத்தமளிக்கிறது.
மொத்தத்தில் பெயர் சொல்லும்படியான பெரும்பாலான திரைப்படங்களில் கிச்சாஸ் போன்ற திறமையான ஒளிப்பதிவாளர்கள் பணிபுரியாதது வருத்தமளிக்கிறது.