இளையராஜா அறிமுகப்படுத்திய பாடகர்களில் ஓரிரு பாடல்களோடு காணாமல் போனவர்கள் இருக்கிறார்கள். சில குறிப்பிட்ட பாடல்களை மட்டுமே பாடி இருப்பார்கள். காத்து காத்து ஊத காத்தும் வீசுதே என்ற என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் படத்தில் இடம்பெற்ற பாடல், சத்யா படத்தின் நகரு நகரு வருது வருது தஞ்சாவூர் தேரு உள்ளிட்ட சில குறிப்பிட்ட பாடல்களை பாடியவர் லலிதா சாகரி. அதே போல் வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி, ராதே என் ராதே உள்ளிட்ட பாடல்களை பாடியவர் ரமேஷ். இதில் ரமேஷ் மறைந்து விட்டார். லலிதா சாகரி தெலுங்கில் மட்டும் அவ்வப்போது பாடி வருகிறார்.இவர்களை பற்றி ஏற்கனவே சில கட்டுரைகளில் பார்த்திருக்கிறோம்.
இவர்களை போலவே அதிகம் அறியப்படாத பாடகிகள் வரிசையில் வருகிறார் பி.ஆர் சாயா. 1983ல் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ஜோதி படத்தில் வரும் சிரிச்சா கொல்லிமலை குயிலு எஸ்.பி.பியுடன் இணைந்து பாடலை பாடியுள்ளார்.
இந்த பாடலை கேட்டு பார்ப்பவர்களுக்கு தெரியும் இவரின் குரல் எவ்வளவு இனிமையானதென்று இந்த பாடலை முதலில் கேட்பவர்கள் யார் இந்த பாடகி இவர் மிக அருமையா பாடுறாரே, இதற்கு முன்பு இது போல குரல் கேட்டதில்லையே என தேட வைக்கும் குரல் இவருடையது.
தமிழில் அதிகம் பாடாவிட்டாலும் தாய்மொழியான கன்னடத்தில் அதிக பாடல்களையும், துலு மொழி பாடல்களையும், மற்றும் பிரைவேட் பக்தி ஆல்பங்களிலும் பாடியுள்ளார் பி.ஆர் சாயா.
தற்போது கன்னட டிவி சானல்களில் பாடல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.