கமல்ஹாசனின் படங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனிரகமான படங்கள் ஆகும் எல்லா படங்களும் ஒரு வித வித்தியாசத்தை வெளிப்படுத்தக்கூடியவை அப்படியாக கமல்ஹாசன் எத்துப்பல்லுடன் நடித்த ஒரு படம்தான் ஜப்பானில் கல்யாணராமன். இது முன்பு வெளிவந்த கல்யாணராமன் படத்தின் தொடர்ச்சி போல பார்க்கப்பட்டாலும் தொடர்ச்சி கிடையாது. ஏனென்றால் கல்யாணராமன் படத்துக்கு ஜி. என் ரங்கராஜன் இயக்குனர், ஜப்பானில் கல்யாணராமனுக்கு எஸ்.பி முத்துராமன் இயக்குனர்.
அந்த நேரத்தில் எஸ்.பி முத்துராமன் கமர்ஷியல் இயக்குனர் ஆவார். இது போல மசாலா கலவையுடன் படம் எடுப்பதில் வல்லவர். கமல், ரஜினிக்கு முக்கிய ஆக்சன் படங்களை தந்தவர் இவர்.
கல்யாணராமன் படத்தின் கமலை ஆவி கதாபாத்திரமாக காமெடியாக சித்தரித்து இதில் கதாநாயகன் கமல்ஹாசனின் ஆவி சித்தப்பாவாக காமெடியாக சித்தரிக்கப்பட்டிருப்பார்.
இந்த படத்தின் சிறப்பு ஜப்பானில் முழுக்க முழுக்க படத்தின் காட்சிகளை எடுத்தது கதையும் ஜப்பானில் நடப்பது போன்றே காண்பிக்கப்பட்டிருக்கும்.
பிஸினஸ் விசயமாக ஜப்பான் சென்றிருக்கும் கமலை, வில்லன் சத்யராஜ் ஜப்பானிலும் விடாமல் சென்று துரத்துவதுதான் கதை.
கதாநாயகியாக ராதா நடித்திருந்தார். மாஸ்டர் டிங்கு கமல் மகனாக நடித்திருந்தார்.
ஜப்பானை அதற்கு முன் சில படங்களில் சின்ன சின்ன காட்சிகளில் திரைப்படங்களில் காண்பித்தாலும் இந்த படத்தில் தான் அதிகம் ஜப்பான் வெளிப்பட்டிருக்கும்.
இதில் ஜப்பான் நாட்டின் வருடா வருடம் நடக்கும் எக்ஸ்போ பொருட்காட்சியை மிக அருமையாக படமாக்கி இருப்பார். படத்தில் மிக அருமையாக தொடர்ந்து அந்த எக்ஸ்போ காட்சிகள் காண்பிக்கப்பட்டிருக்கும். ஒளிப்பதிவு செய்தவர் பிரபல ஒளிப்பதிவாளர் டி.எஸ் விநாயகம் ஆவார்.
இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக வந்தது குறிப்பாக ராதே என் ராதே, சின்னப்பூ சின்னப்பூ, வேட்டி மடிச்சு கட்டு உள்ளிட்ட பாடல்கள் சக்கை போடு போட்டன. இதில் வராமலே போய் விட்ட காதல் உன் லீலையா பாடலும் அடங்கும் இளையராஜா இப்பாடலை உருகி பாடி இருப்பார். கேசட்டில் மட்டுமே இப்பாடல் வந்தது.
படத்தின் காமெடிக்காக கவுண்டமணி, கோவை சரளா காட்சிகள் இருந்தது. ஜவுளிக்கடையில் அதிர்ஷ்ட கூப்பன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜப்பான் செல்லும் தம்பதிகளாக அவர்களுக்கு வழிகாட்டியாக வரும் சித்ரா லட்சுமணனும் கலக்கி இருந்தார்கள்.
இன்றுடன் இப்படம் 34 வருடங்களை எட்டியுள்ளது.கடந்த 1985ம் ஆண்டு நவம்பர் 11 ம்தேதி இப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.