தமிழ் சினிமாவில் எப்பொழுதும் குடும்பத்துடன் பார்ப்பது போன்ற Feel Good படங்கள் நிறைய உள்ளன. அதிலும் குறிப்பாக இயக்குநர் விக்ரமனின் படங்கள் அனைத்துமே இந்த ரகம் தான். இப்படி இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி அதே டைப்பிலேயே தனது முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் வெற்றியைக் கொடுத்தவர் இயக்குநர் ராஜகுமாரன். நீ வருவாய் என என்ற படத்தின் மூலம் அஜீத்துக்கு ஏராளமான பெண் ரசிகைகளை பெற்றுக் கொடுத்தவர்.
1999-ல் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் ராஜகுமாரன் இயக்கத்தில் வெளிவந்த நீ வருவாய் என திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இதில் தேவயானி, பார்த்திபனுடன், அஜீத் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மென்மையான முக்கோண காதல் கதையைக் கையில் எடுத்து அதற்கு தனது வசனங்கள் மூலம் உயிர்கொடுத்து ஏராளமான பெண் ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருப்பார் இயக்குநர் ராஜகுமாரன்.
இந்தப் படத்தின் 25 ஆண்டினைக் கொண்டாடும் வகையில் அண்மையில் பார்த்திபன், தேவயானியின் நேர்காணல் ஒன்று வெளியானது. அதில் பார்த்திபன் பேசும் போது, “நீ வருவாய் என படத்தில் எனக்கு மிகவும் பிடித்ததே அஜீத் வரும் காட்சிகள் தான். படம் முழு ஹீரோவாக நான் வந்தாலும் அஜீத் நடித்த காட்சிகளே பெரிதும் பேசப்பட்டது. இதனால் அவர் மேல் எனக்கு செல்லக் கோபம். கிளைமேக்ஸ் காட்சியில் வரும் வசனங்களான நீ என்னைக் காதலிக்காவிட்டாலும் பரவாயில்லை.. நான் உன்னை காதலியாவே நினைச்சு வாழ்க்கை முழுக்க இருந்திடுறேன்.. என்று கூறும் வசனங்கள் பெரிய அளவில் ரசிகர்களைச் சென்றடைந்தது.” என்று கூறினார்.
இளையராஜா கொடுத்த வாழ்க்கை..! அப்படியாப்பட்ட மனோவுக்கு இப்படி ஒரு நிலைமையா?
படத்தில் பாடல்கள் இசை வசந்தம் எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் ரசிகர்களைத் தாலாட்டியது. கேசட்டுகளில் ரிபீட் மோடில் டேப் ரிக்கார்டர்களும், சிடி பிளேயர்களும் தேய்ந்தன. சிறந்த கதை எழுத்தாளருக்கான மாநில திரைப்பட விருது இயக்குநர் ராஜகுமாரனுக்கு வழங்கப்பட்டது. இதில் பார்த்திபன் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் முதலில் விஜய்யிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவர் அஜீத் கதாபாத்திரம் கேட்டதால் அவரால் நடிக்க முடியவில்லை. இந்தப் படத்தின் ஷுட்டிங்கில் தான் இயக்குநர் ராஜகுமாரனுக்கும், தேவயானிக்கும் காதல் மலர்ந்து. மேலும் பார்த்திபன்-தேவயானி ஜோடி மீண்டும் அழகி படத்தில் இணைந்தனர்.