கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நேற்றிரவு 9 மணிக்கு இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென கிரேன் அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்கள் மூவர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 10 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்து பூந்தமல்லி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தால் கமல்ஹாசன், ஷங்கர் உள்பட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்’